

மதுரை: மதுரையில் மழை பெய்தாலே வைகைக் கரை சாலை மழை வெள்ளத்தில் மூழ்குவதால் மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
மதுரை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க நகரின் மையமாக ஓடும் வைகை ஆற்றின் இரு புறமும் நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டது. மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து இந் சாலையை அமைத்துள்ளனர். நகர்ப்பகுதியில் ராஜா மில் பகுதியில் இருந்து குருவிக்காரன்சாலை வரை 3 கி.மீ., தொலைவிற்கு ரூ.80 கோடியில் மாநகராட்சி நான்கு வழிச்சாலை மட்டுமில்லாது பூங்கா, நடைபாதை, தடுப்பு சுவர் போன்றவை அமைக்கிறது. மீதி 9 கி.மீ., தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ரூ.300 கோடியில் நான்கு வழிச்சாலை சாலை அமைத்துள்ளனர். ஆனால், மாநகராட்சி அமைத்த பகுதியில் பல இடங்களில் சாலை தொடர்ச்சியாக இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் வாகன ஓட்டிகள் மீண்டும் நகர்பகுதி சாலைகள் வந்து மீண்டும் வைகை கரை சாலைக்கு செல்ல வேண்டிய உள்ளது.
நில ஆர்ஜிதம் செய்வதில் நீடிக்கும் பிரச்சனையில் இந்த சாலை தொடர்ச்சியாக இல்லாமல் உள்ளதாகவும், விடுப்பட்ட இடங்களில் சாலை அமைப்பதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதனால், எந்த நோக்கத்திற்காக இந்த சாலை அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவடையாமல் மீண்டும் நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்கின்றன.
இந்நிலையில், வைகை கரை இரு புறமும் நான்கு வழிச்சாலை போட்டப்பகுதியில் பல இடங்களில் மழைநீர் தேங்கியும், மழைவெள்ளத்தில் மூழ்கியும் மதுரையில் மழை பெய்தாலே இந்த சாலையை மக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீஸார் வைகைக் கரை சாலைகளில் போக்குவரத்து தடை செய்து, வாகனங்களை நகர்பகுதி சாலையில் திருப்பி விடுகின்றனர். அதனால், ஏற்கெனவே நெரிசல் நீடிக்கும் நகரசாலைகளில் மழைக்காலத்தில் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பிக்கிறது. குருவிக்காரன்சாலை பகுதியில் இருந்து அண்ணாநகர்-தெப்பக்குளம் பாலத்திற்கு செல்லும் விரனூர் ரிங் ரோடு செல்லும் வைகைரை சாலையில் மழைக்காலத்தில் தண்ணீர் தெப்பம்போல் தேங்குகிறது. அதுபோல், அரசு மீனாட்சிக்கல்லூரி அருகே யானைக்கல் பாலம் கீழே செல்லும் வைகை கரை சாலை மழைவெள்ளத்தில் மூழ்கிறது. அதனால், இப்பகுதியில் மழை பெய்தாலே போலீஸார் போக்குவரத்தை தடை செய்தனர்.
இப்படி வைகை கரை நான்கு வழிச்சாலை போடாத இடங்களில் வாகன ஓட்டிகள், மக்கள் தொடர்ச்சியாக இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையும், போட்ட இடங்களில் மழைக்காலத்தில் மழை வெள்ளம் தேங்கி போக்குவரத்து தடை ஏற்படும் பரிதாபமும் தொடர்கிறது. வைகை கரை சாலையை வடிவமைத்த மாநகராட்சி பொறியாளர்களை பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் மதுரைவாசிகள் தண்ணீர் தேங்கிய வைகைக் கரை சாலைகளின் அவலங்களை புகைப்படமாக எடுத்து பதிவிட்டு தங்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.