Last Updated : 09 Sep, 2022 03:00 PM

 

Published : 09 Sep 2022 03:00 PM
Last Updated : 09 Sep 2022 03:00 PM

‘ரேஷனே இல்லாத புதுச்சேரி... மாநில உரிமையை மீட்க செப்.20 முதல் 200 கி.மீ பிரசார நடைபயணம்’ - சிபிஎம்

புதுச்சேரி: "நாட்டிலேயே ரேஷனே இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ள சூழலில் தமிழக, கேரள மாநிலங்களில் ரேஷனில் வழங்கும் பொருட்களை வைத்து மாநில உரிமை மீட்க, வரும் செப்டம்பர் 20 முதல் 26 வரை 200 கி.மீ பிரசார நடைபயணம் மேற்கொள்ளப்படும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: ''சட்டப்பேரவைத் தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளை திறப்போம் என்றனர். ஆனால், வங்கிக் கணக்கில் செலுத்திய பணத்தையும் பயனாளிகளுக்கு தருவதை நிறுத்தி விட்டனர். அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளத்தில் ரேஷனில் பொருட்கள் தரும் நிலையில் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. நாட்டிலேயே புதுச்சேரியில்தான் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன.

ரேஷனில் பொருட்கள் தர ஒதுக்கப்பட்ட நிதியை வெள்ள நிவாரணத்துக்கு தந்துவிட்டதாக முதல்வர் தெரிவிக்கும் சூழல் உள்ளது. பாஜகவைச் சேர்ந்த துறை அமைச்சர் சாய் சரவணக்குமாரோ, கட்சியினருக்கோ, ஊடகத்துக்கோ, மக்களுக்கோ அறிவிக்காமல் தனது தொகுதி மக்களை அழைத்து வந்து ரேஷன் கடை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்தும் அவலம் உள்ளது. இதுபோல் பல பிரச்சினைகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மாநில உரிமை மீட்போம், புதுச்சேரி மக்கள் நலன் காப்போம் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் செப்டம்பர் 20 முதல் 26 வரை 200 கிலோ மீட்டர் பிரசார நடைபயணம் மாநிலச்செயலர் ராஜாங்கம் தலைமையில் நடக்க உள்ளது.

மத்திய அரசு ஆசிரியர் தினத்தன்று கல்வித்துறைக்கு ரூ.27,000 கோடியை ஒதுக்கி, புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் புதிய திட்டநிதி ஒதுக்கீடு இல்லை என பிளாக்மெயில் செய்துள்ளது. அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ரேஷனில் பொருட்கள் தரும் வரை வலுவான இயக்கத்தை சிபிஎம் முன்எடுக்கும். பாஜகவைத் தோற்கடிக்க அகில இந்திய அளவில் ஒரே அணியில் அனைத்து எதிர்க்கட்சிகளும் வருவது அவசியம். தேசிய அளவில் இல்லாவிட்டாலும் மாநில அளவில் ஒருங்கிணைந்து வெல்ல வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்'' என்று குறிப்பிட்டார்.

சிபிஎம் அலுவலகத்தில் மீடியா செல்லையும் திறந்து வைத்தார். பேட்டியின்போது மாநிலச்செயலர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா சுந்தரராமன், பெருமாள், ராமசந்திரன், தமிழ்ச்செல்வன், சீனுவாசன், பிரபுராஜ், சத்தியா ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x