Published : 09 Sep 2022 02:41 PM
Last Updated : 09 Sep 2022 02:41 PM

“பலரும் பாஜகவை எதிர்த்துப் போராடாமல் சரணடைகின்றனர்” - ராகுல் காந்தி

செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி

கன்னியாகுமரி: சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறையைக் கொண்டு எதிர்க்கட்சியினருக்கு பாஜக அரசு அழுத்தம் கொடுப்பதாகவும், பலரும் பாஜகவை எதிர்த்துப் போராடாமல் அவர்களிடம் சரணடைந்துவிடுவதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

இந்திய ஒற்றுமை பயணத்தின் 3-வது நாளான இன்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி புலியூர்குறிச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "மக்களை இணைப்பதுதான் இந்த நடைபயணத்தின் நோக்கம். பாஜக மக்களைப் பிரித்து வைத்திருக்கிறது. அந்தப் பிரிவினையிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே இந்த பயணம். இந்தியாவில் எப்போதுமே இரண்டு வெவ்வேறு பார்வைகள் உண்டு. ஒன்று மக்களை அடக்கி கட்டுப்படுத்துவது, மற்றொன்று மக்களைச் சார்ந்தது, திறந்த மனது கொண்டது. என்னைப் பொறுத்தவரை இந்தப் போராட்டம் தொடரும்” என்றார்.

அப்போது, “காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், கட்சிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், நீங்கள் இந்தப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறீர்கள். மக்கள் மத்தியில் இந்தக் கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை ஏன் எடுக்கவில்லை என்ற எண்ணம் எழுந்திருக்கிறதே” என்று செய்தியாளர்கள் தமிழில் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “நான் நிச்சயமாக தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் அழகான மொழி. ஆனால் கடினமானது” என்றார். பின்னர், அந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒருவேளை காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு பாஜக அழுத்தம் கொடுத்தால், அப்போது அவர்களை ஒருங்கிணைப்பதற்கான பணிகளைச் செய்வேன்" என்றார்.

மேலும், “நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் பாஜக தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இவற்றைக் கொண்டு எதிர்கட்சிகளுக்கு எதிரான அழுத்தங்களை பாஜக கொடுத்து வருகிறது. சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறையை அவர்கள் எவ்வாறு கையாளுகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும்.

இது இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போராட்டம் இல்லை; அரசின் கட்டமைப்பை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தற்போது போராடி வருகின்றன. இது அனைவருக்குமே தெரியும். ஆனால், இது சாதாரண போராட்டம் இல்லை, சற்று வித்தியாசமானது. எனவே, பலரும் எதற்கு பிரச்சினை என்று பாஜகவை எதிர்த்துப் போராடாமல் அவர்களிடம் சரணடைந்துவிடுகின்றனர்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x