

மதுரை: " ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வி, இன்று அதிமுக கட்சியே பிளவுபட்டு இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் என்று இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது. இப்போது அவர் வகிக்கும் பதவியே தற்காலிக பதவி" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "மக்கள் நமக்கு எதை நம்பி வாக்களித்தனரோ, தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதையெல்லாம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தோமோ நேரடியாக சென்று அதையெல்லாம் அவர்களிடம் கூறினோம். அதை ஏற்றுக்கொண்ட மக்கள் நமக்கு வாக்களித்தனர்.
தேர்தலில் வெற்றி பெற்றபோது, நான் வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து நாங்கள் பணியாற்றுவோம் என்றேன். தேர்தல் நேரத்தில் எந்த உறுதிமொழி கொடுத்து ஆட்சிக்கு வந்தோமோ அந்த உறுதிமொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நம் மீது மக்களுக்கு பல மடங்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அசைக்க முடியாத நம்பிக்க ஏற்பட்டிருக்கிறது. நாம்தான் இனி எந்த தேர்தல்களாக இருந்தாலும், வெற்றி பெறப்போகிறோம் என்ற நம்பிக்கை நம்மைவிட மக்களுக்கு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல்களே அதற்கு சாட்சியாக அமைந்தது.
இதற்கிடையில் ஒரு நகைச்சுவை நடந்துள்ளது. திமுக எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசிக் கொண்டுள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர்களிடம் உள்ள எம்எல்ஏக்களை அவரிடம் பேசுவது இல்லை.
அம்மையார் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வி, இன்று அதிமுக கட்சியே பிளவுபட்டு இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் என்று இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது. இப்போது அவர் வகிக்கும் பதவியே தற்காலிக பதவி.
இந்த தற்காலிக பதவியை வைத்துக்கொண்டு இன்னொரு கட்சியைப் பற்றி பேச தகுதி இருக்கிறதா? நானும் உயிரோடு இருக்கிறேன், இந்த நாட்டில் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காகத் தான் இந்த காமெடி கதைகளையெல்லாம் கூறி வருகிறார்.
என்னைப் பொருத்தவரை, திட்டமிட்டு பரப்பக்கூடிய இந்த பொய்ப் பிரச்சாரத்தைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. மக்கள் நமக்கு நல்லது செய்ய வாய்ப்பு அளித்துள்ளனர்" என்றார்.