

'முதல்வர் ஜெயலலிதாவுக்கு நானும், காங்கிரஸ் கட்சியும் உறுதுணையாக இருப்போம்' என அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னையில் தெரிவித்தார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கேட்டறிந்தார் ராகுல் காந்தி.
சென்னைக்கு திடீர் பயணமாக அப்போலோ மருத்துவனை இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் வந்த ராகுல் காந்தி, முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனை வரை அவர் வந்து சேர போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. விமான நிலையத்திலிருந்து 15 நிமிடங்களில் ராகுல் அப்போலோ மருத்துவமனை வந்தடைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக சென்னை வந்தேன். முதல்வர் உடல் நலம் தேறி வருவதாகவும், அவர் விரைவில் குணமடைவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்தருணத்தில் நானும், காங்கிரஸ் கட்சியும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருப்போம்" என்றார்.
15 நாட்களுக்கு மேல்...
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்கள் கடந்துவிட்டன. கடந்த செப்டம்பர் 22-ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், "முதல்வருக்கு இருக்கும் சர்க்கரை நோய், குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சுக்குழல் அழற்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டும் மருத்துவர்களின் தொடர் ஆலோசனைகள், மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையிலும் அப்போலோ மருத்துவ நிபுணர்கள் குழுவினர் விரிவான மருத்துவ சிகிச்சைத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். தற்போது முதல்வருக்கு செயற்கை சுவாசம், நுரையீரலில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றுக்கான மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், ஊட்டச்சத்துகள், பொது மருத்துவ சிகிச்சை மற்றும் இதர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
முதல்வருக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் தொடர்வதுடன், அவர் மருத்துவமனையில் நீண்டநாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும்" என விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இத்தகைய சூழலில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மருத்துவமனையில் முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்றார்.
திருநாவுக்கரசரின் நெகிழ்ச்சி:
சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அதிமுக நிர்வாகிகளிடம் முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வந்த திருநாவுக்கரசர், "முதல்வர் குணமடைந்ததும் அனுமதி கிடைத்தால் அவரை நேரில் சந்தித்துப் பேசுவேன்.
நான் அதிமுக இளைஞரணிச் செயலாளராக இருக்கும்போது அவர் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். எனவே, தனிப்பட்ட முறையிலும், தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையிலும் அவரை சந்திப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" எனக் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.