

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்துக்கு செல்லும்போது, சமூக விரோதிகளால் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர் நேற்றுஅளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
அதிமுக அடிப்படை தொண்டர்களால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்தல் மூலம் கடந்த2021 டிச.6-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தலைமையில் கட்சி மக்கள் பணியையும், அரசியல் பணியையும் செய்து வருகிறது.
இந்த சூழலில் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சில நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு குறைபாடு
கடந்த ஜூலை 11-ம் தேதி கட்சி அலுவலகத்துக்கு ஓபிஎஸ் வந்தபோது, பாதுகாப்பு குறைபாடு காரணமாக அங்கு குவிக்கப்பட்டிருந்த ரவுடிகள், குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சீல் வைத்த உத்தரவை ரத்து செய்ததுடன், கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக பல சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள்அமர்வு, ‘‘அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பாக நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதை அசல் வழக்கே தீர்மானிக்கும்’’ என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடரும் சூழலில், கட்சி அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்று கட்சிப் பணி ஆற்ற, சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை.
கலவரம் செய்ய திட்டம்
எதிர்வரும் நாட்களில் அவர் கட்சி அலுவலகம் செல்லும்போது, அவரை வரவேற்க அதிகப்படியான தொண்டர்கள் கூடும் சூழ்நிலை உள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி, சில சமூக விரோதிகள் கலவரம் செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
எனவே, ஓபிஎஸ் மற்றும் நிர்வாகிகள் வந்து செல்ல எந்த இடையூறும் இல்லாத வகையில் கட்சி அலுவலகமான எம்ஜிஆர் மாளிகைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.