Published : 09 Sep 2022 06:25 AM
Last Updated : 09 Sep 2022 06:25 AM

104 இடங்கள் அபாயகரமான பகுதிகள்; சாலை விபத்துகளை குறைக்க தனிக் குழு: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்துப் பாதுகாவலர்கள் அமைப்பு அலுவலகத்தை நேற்று திறந்துவைத்தார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால். உடன், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் உள்ளிட்டோர்.

சென்னை: சென்னையில் 104 இடங்கள் சாலை விபத்துகள் நேரிடும் அபாயகரமான பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும், சாலை விபத்துகளைக் குறைக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்துப் பாதுகாவலர்கள் அமைப்பு (டிராபிக் வார்டன்) அலுவலகத்தை ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏற்கெனவே செயல்பட்டு வரும் போக்குவரத்துப் பாதுகாவலர்கள் அமைப்பில் 142 பேர் இருக்கின்றனர். தற்போது புதிதாக 24 பெண்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சாலை பாதுகாப்பு தொடர்பாக இந்த அமைப்பின் மூலம் இதுவரை 415 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 470 பள்ளிகளைச் சேர்ந்த 18,500 மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, தன்னார்வலர்கள் மூலம் பள்ளிகள் முன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

சென்னையில் விபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 104 இடங்கள் அபாயகரமான பகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளன. விபத்துகளைத் தடுக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஐ.ஐ.டி.யைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் விபத்து தடுப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்வர்.

போக்குவரத்து போலீஸாரின் பல்வேறு முயற்சிகளால் 2021-ம் ஆண்டில் 20 சதவீத விபத்து மரணங்கள் குறைந்துள்ளன. நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறையும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பொது இடங்களில் அத்துமீறல் தொடர்பான புகார்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. யூடியூப் சேனல் அத்துமீறல் தொடர்பாக புகார்கள் வந்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல, மாணவர்கள் மோதல்களைத் தடுக்கவும், சமூக விரோதச் செயல்களைத் தடுக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கு போலீஸார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் மூலம், கொலை சம்பவங்கள் கடந்தஆண்டைவிட 20 சதவீதம் குறைந்துள்ளன.

போதைப் பொருட்கள் தடுப்புநடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உணவுக் கட்டுப்பாட்டு துறை மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து, பல நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அதிக அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில், போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் கருவிகளை வைத்திருப்போர் மீதுதொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆட்டோ, வேன்களில் அதிக மாணவர்களை ஏற்றிச் செல்வோருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டு முதல் தீர்க்கப்படாத கொலை வழக்குகளை முடித்துவைக்க, சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலமோசடி தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிராங்க் வீடியோ என்ற பெயரில் பொதுமக்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு, அவற்றை பதிவிடும் 5 யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x