Published : 09 Sep 2022 07:02 AM
Last Updated : 09 Sep 2022 07:02 AM
சென்னை: சென்னை - கன்னியாகுமரி சாலையை 8 வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அனைத்து மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழக அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: சென்னைதுறைமுகம் – மதுரவாயல் இரண்டுஅடுக்கு உயர்நிலை மேம்பாலத்துக்கு கடந்த மே 26-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிவைத்தார்.
தமிழக நெடுஞ்சாலைத் துறைசுமார் 64,000 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளைப் பராமரித்து வருகிறது. மேலும், தமிழகத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முக்கியமான மாநில நெடுஞ்சாலைகள் 2026-ம் ஆண்டுக்குள், முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்படும். இதில் 2,200 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலையாகவும், 6,700கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழிச்சாலையாகவும் விரிவுபடுத்தப்படும். மேலும், தற்போதுள்ள 1,280தரைப்பாலங்கள் 2026-ம் ஆண்டுக்குள் உயர்மட்டப் பாலங்களாக மாற்றப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, நகராட்சிகளுக்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 10,000 கி.மீ. ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் 5 ஆண்டுகளில், மாவட்ட சாலைகள் தரத்துக்கு மேம்படுத்தப்படும்.
தமிழக முதல்வர் அறிவிப்புப்படி, சாலைப் பாதுகாப்பு செயலாக்கத்துக்காக சிறப்புப் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் வழிகாட்டுதல்படி, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க சாலைப் பாதுகாப்பு பொறியியல் தொடர்பான சிறப்புதொடர் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டு, 335 பொறியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்க கிழக்கு கடற்கரைச் சாலையில், தானியங்கி வேக அமலாக்க அமைப்பு மற்றும் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் சில திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னை– கன்னியாகுமரி சாலையை 6 அல்லது8 வழிச்சாலையாக விரிவுபடுத்துவது அவசியமாகும்.
மேலும், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் மற்றும் தஞ்சாவூர் பெரியகோயில் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, தேசிய நெடுஞ்சாலைக்கான இணைப்புச் சாலைகளை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கவேண்டும். அதேபோல, மாநிலச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் சந்திப்புகளை மேம்படுத்த சிறப்பு நிதியை அனுமதிக்கவேண்டும். சில பகுதிகளில் மக்களின் கோரிக்கையை ஏற்று, சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
இம்மாநாட்டில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங்மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT