Published : 09 Sep 2022 06:20 AM
Last Updated : 09 Sep 2022 06:20 AM

விருத்தாசலம் ஆக்கிரமிப்பு விவகாரம்: சொத்து வரி வசூலித்த நகராட்சி நிர்வாகமே மாற்று இடம் தர வலியுறுத்தல்

விருத்தாசலம் 15-வது வார்டில் இடிக்கப்படும் ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள்

விருத்தாசலம்: விருத்தாசலம் நகரில் முல்லா குட்டையை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இந்திராநகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சொத்து வரி வசூலிப்பில் ஈடுபட்டு வந்தது. இதனால் நகராட்சி நிர்வாகமே மாற்று இடமும், இழப்பீடும் தரவேண்டும் என ஆக்கிரமிப்பு குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் 15-வது வார்டில் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட முல்லா குட்டையை, 40 வருடங்களுக்கு முன் சிலர் ஆக்கிரமித்து குடியிருப்பு கட்டி குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் வணிக வளாகமும் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் ஆக்கிரமிப்புத் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இவ்வழக்கில் , ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். அதையடுத்து ஆக்கிரமிப்பை செப்.9-ம் தேதிக்குள் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில், நகராட்சி நிர்வாக கட்டிட ஆய்வாளர் சேகர் தலைமையில் ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் இடிக்கும் பணி கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள், கட்டிட இடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளரும், கடலூர் மாநகராட்சி துணை மேயருமான தாமரைச்செல்வன், நேற்று விருத்தாசலம் சார்- ஆட்சியரை சந்தித்தார்.

ஆக்கிரமிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பதால், கட்டிடம் இடிக்கும் பணியை நிறுத்தி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி சார்- ஆட்சியர் பழனி இதற்கு மறுத்துவிட்டார்.

இதுகுறித்து கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கூறுகையில், "ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் 15-வது வார்டில் நகராட்சி நிர்வாகம் கடந்த ஐனவரி மாதம் வரை சொத்து வரி வசூலித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் கட்டிடங்களுக்கு பீம் ரசீது வழங்கியுள்ளார்.

2007-ம் ஆண்டு கட்டப்பட்ட வணிகக் கட்டிடங்களுக்கு நகராட்சி கட்டிடப் பொறியாளர் ஒப்புதல் வழங்கியுள்ளார். குடிநீர் வரி வசூலித்துள்ளனர். மின் இணைப்பு கொடுத்துள்ளனர். இவை அனைத்தும் செய்து கொடுத்து, அவர்களுக்கு தங்குவதற்கு நம்பிக்கை ஏற்படுத்திக் கொடுத்த நகராட்சி நிர்வாகமே இந்த நிகழ்வுக்கு பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.

இதையடுத்து குடியிருப்பு வாசிகளிடம் பேசியபோது, "நகராட்சி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் முகாம் போட்டு வரி வசூலித்தது. தற்போது யார் தலைமையில் கட்டிடங்கள் இடிக்கப்படுகிறதோ, அந்த கட்டிட ஆய்வாளர் தான், நாங்கள் கட்டிடம் கட்டுவதற்கும் ஒப்புதல் அளித்தார். இப்போது திடீரென இடிக்க வேண்டும் என்றால் நாங்கள் எங்கே செல்வது" என கண்ணீர் மல்க கூறினர்.

இதையடுத்து நகராட்சிஆணையரிடம் கேட்டபோது,"அப்போதிருந்தவர்கள், அங்குள்ளவர்களின் வாழ்வாதாரத்திற்காக அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வரி வசூலித்திருக்கலாம். ஆனால் நகராட்சி நிர்வாகம் முறையாக அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. கட்டிடங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்க வாய்ப்பில்லை" என்றார்.

இதையடுத்து கட்டிடப் பொறியாளர் சேகரிடம் கேட்ட போது, "ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கினோம்" என்றார். இதனை மீறி கட்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேட்டபோது, அவர் பதிலேதும் கூறவில்லை.

எங்களின் குடியிருப்புகளுக்கு நகராட்சி நிர்வாகம் சொத்து வரி வசூலிப்பில் ஈடுபட்டு வந்தது. இதனால் நகராட்சி நிர்வாகமே மாற்று இடமும், இழப்பீடும் தரவேண்டும் என ஆக்கிரமிப்பு குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x