

காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் நாடகத்திற்கு உச்ச நீதிமன்றம் துணைபோகாது என நம்புவதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டிய தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பது தமிழர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது. கர்நாடக மக்களை ஏமாற்றி திருப்திப்படுத்தவும் சட்டமன்றத் தேர்தலில் அவர்களின் வாக்குகளைப் பெறவும் இத்தகைய நாடகத்தை மத்திய அரசு நடத்துகிறது.
உச்ச நீதிமன்றம் இந்த நாடகத்திற்கு துணைபோகாது என தமிழர்கள் நம்புகிறார்கள். 48 ஆண்டு காலமாக தமிழத்திற்குரிய காவிரி நீரைத் தராமலும், நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் ஆணைகளை மதிக்காமலும் கர்நாடக அரசு நடந்து கொள்வதற்கு தொடர்ந்து பதவியிலிருந்த மத்திய அரசுகளே காரணமாகும்.
காங்கிரஸ், ஜனதா, பாரதியஜனதா ஆகிய அரசுகள் தொடர்ந்து காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் அழிச்சாட்டியத்திற்கு துணை நின்று தமிழகத்திற்கு வஞ்சனை இழைத்திருக்கின்றன. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எதிர்காலத்தில் இந்தியாவில் பாரதூரமான விளைவுகளை இவை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள அகில இந்திய கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் காவிரி பிரச்சினையில் ஆதரவு அறிக்கைகள் வெளியிடுவதால் பயனில்லை. கர்நாடகத்தின் அநீதியான போக்கை அவர்களின் அகில இந்திய தலைமைகள் கண்டிக்கும்படி வற்புறுத்த வேண்டும். இல்லையெனில் இவர்கள் ஒப்புக்காக அறிக்கைவிடுகிறார்கள் என்றுதான் தமிழக மக்கள் கருதுவார்கள்'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.