காவிரி: உயர்நிலை தொழில்நுட்பக் குழு உண்மையை நிலைநாட்ட வாசன் கோரிக்கை

காவிரி: உயர்நிலை தொழில்நுட்பக் குழு உண்மையை நிலைநாட்ட வாசன் கோரிக்கை
Updated on
2 min read

காவிரி நீர் பிரச்சினையில் மத்திய உயர்நிலை தொழில்நுட்பக் குழு ஆய்வின் உண்மைத் தன்மையை உச்ச நீதிமன்றத்திற்கு அளித்து தமிழகத்தின் நியாயத்தினை நிலைநாட்ட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் கடந்த 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் மத்திய உயர்நிலை தொழில்நுட்பக் குழு கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள நீர்நிலைப் பகுதிகளையும், நீர் இருப்பையும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் வருகின்ற 17 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் தலைமையில் உயர்மட்டத் தொழில்நுட்பக் குழுவை அமைத்தது. இக்குழுவினர் கடந்த 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் கர்நாடகாவில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள நீர் இருப்பை ஆய்வு செய்ததோடு, கர்நாடக அரசு அளித்த அம்மாநில வறட்சி நிலை, குடிநீர் தேவை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையையும் மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும் அக்குழுவினர் கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் தமிழகத்தில் காவிரிப் பாசனப் பகுதிகளை ஆய்வு செய்தனர். குறிப்பாக மேட்டூர், பவானி சாகர் அணையில் நீர் இருப்பு மற்றும் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட பகுதிகளிலும் நீர் இருப்பை ஆய்வு செய்து, பாசனப்பகுதியில் விவசாயத்தின் உண்மை நிலை குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

அப்போது விவசாயிகள் அக்குழுவினரிடம், 1990 முதல் கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை என்றும் மழை இல்லாத காரணத்தாலும், காவிரி நீர் கிடைக்காததாலும் 25 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யமுடியாமல் தரிசு நிலமாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் 5 லட்சம் ஏக்கரில் மட்டுமே நேரடி சம்பா சாகுபடியில் நெல் விதைக்கப்பட்டு, தண்ணீர் கிடைக்காமல், அதன் முளைப்புத்தன்மையை இழந்து வருகின்றது. எனவே இந்த சம்பா சாகுபடியைக் காப்பாற்ற கர்நாடக அரசு இதுவரை கால அட்டவணைப்படி வழங்க வேண்டிய மீதமுள்ள 100 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் உடனடியாக அமைத்திட வேண்டும். அவைகள் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஆணையமாக இருக்க வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் வலியுறுத்தினர்.

எனவே உயர்மட்டத் தொழில்நுட்பக் குழு தமிழகத்தில் நீர் நிலைகளையும், நீர் இருப்பையும், வறட்சியையும், குடிநீர் தேவையையும், விவசாயிகளின் கருத்துக்களையும் மற்றும் நேரடியாக பார்வையிட்டதையும் அறிக்கையாக, உண்மை நிலையை, நடுநிலையோடு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் கர்நாடக அரசும், மத்திய அரசும் நடுநிலை தவறி செயல்படுகிற இத்தருணத்தில், மத்திய உயர்நிலை தொழில்நுட்பக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் உண்மை நிலைக்கு ஏற்ப உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு நியாயத்தை வழங்கி, விவசாயிகள் நலன் காக்கும் என்று நம்புகிறேன்'' என வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in