Published : 09 Sep 2022 06:40 AM
Last Updated : 09 Sep 2022 06:40 AM
திருச்சி: தோல் தொற்று நோயால் தாய் உயிரிழந்ததால், உடலை அவரது மகன் வீல் சேரில் சுடுகாட்டுக்கு கொண்டு சென்று தகனம் செய்தசம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதியார் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி ராஜேஸ்வரி(74). இவர், கணவர் இறந்த நிலையில், மகன் முருகானந்தத்துடன்(42) வசித்து வந்தார். எலெக்ட்ரீசியனாக பணி புரிந்து வரும் முருகானந்தம் திருமணம் செய்து கொள்ளவில்லை.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு பக்கவாதம் ஏற்பட்டதால், முருகானந்தம் பெரும்பாலும் வேலைக்குச் செல்லாமல் தாயை கவனித்து வந்தார். இதனால், அவர் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.
இதனிடையே, ஒவ்வாமை காரணமாக ராஜேஸ்வரிக்கு தோல் நோயும் ஏற்பட்டது. இது மற்றவர்களுக்கு பரவும் தொற்று நோய் என்பதால் கவனமுடன் பராமரிக்குமாறு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியுள்ளார். அதன்பின், முருகானந்தம், தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே வைத்து கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், உடல் நலக்குறைவால் ராஜேஸ்வரி நேற்று உயிரிழந்தார். தனது தாய்க்கு தொற்றும் தோல் வியாதி இருப்பதால், இறுதிச் சடங்குக்கு யாரும் வரமாட்டார்கள் என எண்ணி, வீல் சேரில் தாயின் உடலை வைத்து தள்ளிக் கொண்டு சுடுகாட்டுக்குச் சென்றார். பின்னர், அங்குள்ள ஊழியர் உதவியுடன் இறுதிச் சடங்கு செய்த பின் உடலை தகனம் செய்தார்.
தகவலறிந்த மணப்பாறை போலீஸார் அங்கு சென்று முருகானந்தத்திடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, தனது தாய்க்கு இருந்த தோல் நோய் பிறருக்கு பரவும் என மருத்துவர்கள் கூறியதால், யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும், ஆம்புலன்ஸ் வசதி பெற தன்னிடம் போதுமான பணம் இல்லை என்றும் முருகானந்தம் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT