Published : 09 Sep 2022 06:00 AM
Last Updated : 09 Sep 2022 06:00 AM
திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக தென்பெண் ணையாற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு நேற்று 18,854 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், திரு வண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு 2-வது நாளாக நேற்றும் நீர்வரத்து அதிகளவில் இருந்தது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 17,600 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், நேற்று அணைக்கு விநாடிக்கு 18,854 கனஅடியாக தண்ணீர் அதிகரித்துள்ளது.
இதனால், அணைக்கு வரும் 18,854 கனஅடி தண்ணீரும், 11 மதகுகள் வழியாக தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்படுகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 116.50 அடியாக உள்ளது. அணையில் 6,766 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 9.6 மி.மீ., மழை பெய்துள்ளது.
தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கரையோர கிராமங்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 55.11 அடியாக உள்ளது. அணையில் 599 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வரும் விநாடிக்கு 170 கனஅடி தண்ணீரும், செய்யாற்றில் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 3.4 மி.மீ., மழை பெய்துள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைந்திருந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் திடீர் மழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்மட்டத்தை மேலும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 18.04 அடியாக உள்ளது. அணையில் 60.802 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 30 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 115 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 2.2 மி.மீ., மழை பெய்துள்ளது.
ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு அணைக்கு நீர்வரத்து மிக குறைவாக உள்ளது. இதனால், 62.32 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 51 அடியாக உள்ளது. அணையில் 180.291 மில்லியன் கனஅடி தண் ணீர் உள்ளது. அணைக்கு வரும் விநாடிக்கு 10 கனஅடி தண்ணீரும், வெளியேற்றப்படுகிறது. அணை பகுதி யில் 2.2 மி.மீ., மழை பெய்துள்ளது.
வெம்பாக்கத்தில் 39 மி.மீ., மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்துள்ளது. இதில், அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 39 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், ஆரணியில் 3.2, செய்யாறில் 15, செங்கத்தில் 8.2, ஜமுனாமரத்தூரில் 4, மழை, வந்தவாசியில் 7, போளூரில் 15.8, திருவண்ணா மலையில் 12 , தண்டராம்பட்டில் 8.6, கலசப்பாக்கத்தில் 7, சேத்துப்பட்டில் 10.4, கீழ்பென்னாத்தூரில் 15.2 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 12.11 மி.மீ., மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT