NEET | புதுவையில் 2,899 பேர் தேர்ச்சி: தோல்வியடைந்தோர் முயன்று வெற்றிபெற தமிழிசை ஆலோசனை  

புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் நீட் தேர்வில் 2899 பேர் தேர்ச்சி பெற்று மாணவர் குருதேவநாதன் முதலிடம் பிடித்துள்ளார்.

தேர்ச்சி தவறியோரும், மதிப்பெண் குறைந்தோரும் மனச்சோர்வு அடையாமல் முயற்சி செய்து வெல்ல ஆளுநர் தமிழிசை ஆலோசனை தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் புதுச்சேரியில் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விடகுறைந்துள்ளது.

மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை மூலம் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2022-23ம் ஆண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 497 நகரங்களில் நடைபெற்ற தேர்வில் 17.64 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 9,93,060 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரியில் கோரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி உட்பட 8 மையங்களில் நீட் தேர்வு நடந்தது. இத்தேர்வு எழுத 5,749 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5,511 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 238 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இதில் 2,899 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 52.60 சதவீதமாகும். கடந்த 2021-22ம் கல்வி ஆண்டு 4,474 பேர் நீட் தேர்வு எழுதியதில் 2,362 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 52.79 சதவீதமாகும்.

கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 0.19 சதவீதம் குறைந்துள்ளது. புதுச்சேரி மாணவர் குருதேவநாதன் 720க்கு 675 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 1,249 இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கு நீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணாக பொது, இடபிள்யூஎஸ் பிரிவு - 138, மாற்றுத்திறனாளின் (பொது, இடபிள்யூஎஸ் பிரிவு) - 122, ஓபிசி, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் (ஓபிசி, எஸ்சி, எஸ்டி) - 108 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் தமிழிசையின் ஆலோசனை: நீட் தேர்வு முடிவு தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "புதுவையில் இருந்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய 5,749 மாணவர்களில் 2,899 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 675 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தையும், தேசிய அளவில் 1,249 இடத்தையும் பெற்றுள்ள மாணவர் குருதேவநாதனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற இயலாத மாணவர்களும் மனம் சோர்வு அடையாமல் முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in