Published : 08 Sep 2022 01:33 PM
Last Updated : 08 Sep 2022 01:33 PM
மதுரை: கபடி போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் தலைவர்கள் படங்கள் இடம்பெறக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் விஜயநாராயணபுரத்தில் மாலை நேரக் கபடி போட்டி நடத்த அனுமதி கோரி தாசன் என்பவர் உயர் நீதிமன்ற கிலையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரித்து நீதிபதி சதி குமார சுகுமார குருப் பிறப்பித்த உத்தரவு: ''கபடிப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள் அல்லது அரசியல் தலைவர்களின் படங்கள், சாதி ரீதியான அடையாளங்களோ இருக்கக் கூடாது.
போட்டி நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சாதிக் கட்சிகளின் புகைப்படங்களோ, பிளக்ஸ் பேனர்களோ, இருக்க கூடாது. அரசியல் மற்றும் சாதியை ரீதியான பாடல்கள் ஒளிபரப்பக் கூடாது. கபடி விளையாட்டு நடைபெறும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு இருக்க வேண்டும். அனைத்து முதலுதவிக்கான சிகிச்சைகள் உபகரணங்களும் இருக்க வேண்டும். விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடத்தில் தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்பவர்கள் எந்தவிதமான போதைப் பொருட்களோ, மதுவோ உட்கொண்டிருக்கக் கூடாது. இந்த நிபந்தனைகள் அடிப்படையில் கபடி போட்டிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிபந்தனைகளை மீறும் வகை போட்டி நடந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது நடவடிக்கை எடுத்து போட்டியை நிறுத்தலாம்'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT