Published : 08 Sep 2022 06:07 AM
Last Updated : 08 Sep 2022 06:07 AM

ஒற்றுமை பயணம் தொடங்கினார் ராகுல் - குமரியில் முதல் நாள் ஹைலைட்ஸ்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின்இந்திய ஒற்றுமை நடைபயணத்தைகன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை வழங்கி நேற்று தொடங்கி வைத்தார். உடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீ்ஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், தமிழக அமைச்சர் கே.என்.நேரு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர்.

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுலிடம் தேசியக் கொடியை வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்னும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி எம்.பி. மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் நேற்று தொடங்கினார். இதற்காக நேற்று முன்தினம் சென்னை வந்த அவர், நேற்று காலை பெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

பின்னர், சென்னையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாலை 3 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்தார். மாலை 3.15 மணிக்கு தனிப்படகில் விவேகானந்தர் பாறைக்கு சென்றார். அங்குள்ள நினைவு மண்டபத்தில் விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தியான மண்டபத்தில் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்தார். பின்னர், அங்குள்ள பகவதியம்மன் காலடிச்சுவடுக்கு மரியாதை செய்தார்.

மீண்டும் படகில் பயணித்து திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். 4 மணி அளவில் கரை திரும்பிய ராகுல் காந்தி, காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கும், காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கட்டத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோரும் காந்தி அஸ்தி கட்டத்தில் மரியாதை செலுத்தினர்.

பின்னர், காந்தி மண்டபம் வாயிலில் முதல்வர் ஸ்டாலின், தேசியக் கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி அவரது நடைபயணத்தை தொடங்கி வைத்தார். அங்கிருந்து கடற்கரை சாலையில் 600 மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட ராகுல், தேசியக் கொடியை ஏந்தியவாறு பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், தேசிய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், செல்லகுமார், ஜோதிமணி, விஜய் வசந்த், கார்த்தி சிதம்பரம் மற்றும் ராஜேஷ்குமார் எம்எல்ஏ ஆகியோரும் வந்தனர்.

ராகுல் காந்தி மேடைக்கு வந்ததும் அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் தேசியக் கொடியை அசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து ராகுல் பேசியதாவது: தேசியக் கொடியை சிலர் சாதாரணமாக நினைக்கிறார்கள். அது, நமக்கு எளிதாக கொடுக்கப்படவில்லை. இந்தியர்களால் அதுமீட்டெடுக்கப்பட்டது. இந்தக் கொடிஒரு நபருக்கானதல்ல, ஒவ்வொரு இந்தியனுக்குமானது. இது நமது அடையாளம். தற்போது அது பாஜக, ஆர்எஸ்எஸ்ஸால் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகி யிருக்கிறது.

அமலாக்கத் துறை, சிபிஐ,வருமான வரித்துறை போன்றவற்றால் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்துகின்றனர். இந்த அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளின் எந்த தலைவர்களையும் முடக்கிவிட முடியாது.

இந்தியாவை சாதி, மதம், மொழியால் பிரித்துவிட பாஜக நினைக்கிறது. அவர்களால் அவ்வாறு செய்ய முடியாது. நாட்டு மக்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருந்து பாஜகவின் செயல்பாடுகளை முறியடிப்பார்கள்.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. நாட்டில் உள்ள முக்கிய தொழில்கள், சில தொழிலதிபர் களின் கைகளில் உள்ளன.

சிறு, குறு தொழில்களையும், விவசாயத்தையும் பாஜக முடக்கிவிட்டது. இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். மோசமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்த நிலையை மாற்றி இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் தருணம் வந்துள்ளது. இதுதான் இந்த நடைபயணத்தின் நோக்கம்.

சகோதரர், தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய நடைபயணத்தை தொடங்கி வைத்து, சற்று தூரம் பங்கேற்றார். அவருக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இன்று காலை கொட்டாரம் வழியாக சுசீந்திரத்தை காலை 10 மணிக்கு அடைகிறார். அங்கிருந்து மாலை 4 மணிக்கு மீண்டும் நடைபயணம் மேற்கோண்டு நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் மாலை 7 மணி அளவில் நடைபயணத்தை முடிக்கிறார். தொடர்ந்து தக்கலை, மார்த்தாண்டம், படந்தாலுமூடு வழித்தடத்தில் நடைபயணம் மேற்கொண்டு கேரள எல்லையை 10-ம் தேதி அடைகிறார். 11-ம் தேதி முதல் கேரளத்தில் அவரது பயணம் தொடங்குகிறது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x