

சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அடுத்த மாதம் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் வாரியம் நடவடிக்கை எடுத்துவந்த நிலையில், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் சென்னையில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
தமிழக மின் வாரியம் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி கடனில் இருப்பதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது. எனினும், கருத்துக்கேட்புக் கூட்டங்களில் மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்களும், சிறு, குறு தொழில் நிறுவனத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் மின் கட்டண உயர்வு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளது. எனவே, புதிய மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, மின் வாரிய அலுவலகங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயின்டுகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக 100 இடங்களில் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் சார்ஜிங் பாயின்டுகளை நிறுவுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் இவை அமைக்கப்பட உள்ளன.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பைப் பொறுத்து, மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள 1 லட்சத்து 45 ஆயிரம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வாகச் செல்லும் மின் வடங்களை மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதேபோல, விழும் நிலையில் உள்ள வலுவற்ற மின்கம்பங்களும் மாற்றப்பட்டு வருகின்றன. இதில் 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பருவமழை தொடங்குவதற்கு முன் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும்.
இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில், ஏற்கெனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப் புகளை 100 நாட்களில் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இம்மாத இறுதிக்குள் தொடங்கிவைக்க உள்ளார்.
மின் வாரிய அதிகாரிகள் மீது தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில், அதிகாரிகள் தவறு செய்யாமல் கண்காணிக்க மின் வாரியத்தில் உள்ள 12 மண்டலங்களுக்கும், தலா 3 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.