

வேலூர்: வேலூரைச் சேர்ந்த ’இன்னிசைக் கவிஞர்’ இரா.நக்கீரன் காலமானார். அவரது உடல் சி.எம்.சி., மருத்துவமனைக்கு நேற்று தானமாக அளிக்கப்பட்டது.
வேலூர் சலவன்பேட்டை திருப்பூர் குமரன் 2-வது தெருவைச் சேர்ந்தவர் இரா.நக்கீரன் என்ற கிருஷ்ணமூர்த்தி (85). நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 16 வயது முதலே நாடகத் துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.
பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., கவிஞர் சுரதா, நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஓய்வுபெற்ற நீதியரசர் மகராஜன், முன்னாள் ஆட்சியர் பாஸ்கரத் தொண்டைமான், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், இயக்குநர் ஜம்பு உள்ளிட்டோருடன் நெருங்கிப் பழகியவர்.
தனது பன்முகத் திறமைகளால் பாராட்டுகளை பெற்றவர். கவிஞர் கண்ணதாசனால் ‘இன்னிசைக் கவிஞர்’ என்ற சிறப்பு பெயர் பெற்றவர்.
‘கல்பனா நாடக மன்றம்’, ‘ரெயின்போ கிரியேஷன்ஸ்’ என்ற பெயர்களில் நாடக மன்றங்களை நிறுவி திருச்சி, கோவை, சென்னை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். நடிகர் ஆர்.முத்துராமனுக்கு நவரசத் திலகம், நடிகர் மற்றும் எழுத்தாளருமான சோ.ராமசாமிக்கு நகைச்சுவைத் தென்றல் பட்டங்களை கலை நிகழ்ச்சிகள் மூலம் வழங்கி கவுரவித்துள்ளார்.
வானொலி மெல்லிசைப் பாடல்கள் பலவற்றை எழுதியுள்ளார். தமிழிசைப் பாடல்கள், மேடைப் பாடல்கள், 1968-ல் தந்தை பெரியாரால் வெளியிடப்பட்ட பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ‘கவிஞன்’ என்ற முழுக் கவிதை இதழுக்கு இணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
கவிஞர், பாடகர், நடிகர், நாடக இயக்குநர், ஜோதிட ஆராய்ச்சியாளர் என பன்முகத் திறன் கொண்ட கவிஞர் இரா.நக்கீரன், வேலூரில் நேற்று முன்தினம் காலமானார். இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் வேலூர் சி.எம்.சி., மருத்துவமனைக்கு நேற்று தானமாக அளிக்கப்பட்டது.
இவரது மனைவி விஜயலட்சுமி 2014-ம் ஆண்டே காலமாகிவிட்டார். கவிஞருக்கு கே.அசோகன், கே.குமரன் என்ற மகன்களும், ஏ.கவிதா என்ற மகளும் உள்ளனர்.