

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியது:
நாட்டில் மத, மொழி, சாதி வேறுபாடுகளைத்தான் மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் வளர்க்கின்றனர். இந்த நேரத்தில் மக்களை ஒன்றுபடுத்துவதற்காக ராகுல் நடைபயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது தவறு. தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் கிடையாது. குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அதிகரித்தது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவில் எந்தக் கொடி மேலே பறக்கிறதோ இல்லையோ, வேலையின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவை கொடிகட்டிப் பறக்கின்றன. பணவீக்கத்தையும் வேலையின்மையையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது மத்திய அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.