Published : 08 Sep 2022 07:31 AM
Last Updated : 08 Sep 2022 07:31 AM

பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு கூடுதல் சுரங்கப் பாதைக்கான ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: பொதுப்பணித் துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர 2-வது சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பான ஆய்வு அறிக்கையை பொதுப்பணித் துறை செயலர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின்பு 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நிலையில் அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கினாலே உபரிநீர் கேரளப் பகுதிக்கு ஷட்டர் வழியாக திறந்துவிடப்படுகிறது.

தமிழக பகுதிக்கு சுரங்கப்பாதை வழியாக அதிகபட்சமாக விநாடிக்கு 2,500 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும். இதைவிட கூடுதல் நீர் திறக்க வாய்ப்பில்லை. எனவே, தமிழகப் பகுதிக்கு கூடுதலாக ஒரு சுரங்கப்பாதை அமைத்து, அதன் மூலம் தண்ணீர் திறந்துவிட்டால் நமக்கு அதிக அளவில் தண்ணீர் கிடைக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் தமிழகப் பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க 2-வது சுரங்கப்பாதை அமைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.

எனவே, பெரியாறு அணையிலிருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், "முல்லை பெரியாறு அணையிலிருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் நிலைப்பாடு என்ன?" என்று கேள்வி எழுப்பினர்.

அரசு தரப்பில், சுரங்கப்பாதை அமைப்பதற்கான இடத்தில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளதால் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், பெரியாறு அணையிலிருந்து கூடுதல் சுரங்கப்பாதை அமைப்பதுதொடர்பான ஆய்வு அறிக்கையை பொதுப்பணித் துறை செயலர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x