

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நேற்று நடந்த அதிமுக பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர். திமுக குடும்ப கட்சி. அது கார்ப்பரேட் கம்பெனி. உதயநிதிக்கு எந்த பதவியும் கிடையாது. வெறும் எம்எல்ஏ ஆன அவர் அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேயருக்கு உண்டான மரியாதையை செலுத்தவேண்டும். அதனை திமுகவில் எதிர்ப்பார்க்க முடியாது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் திருடுபோன சம்பவம் தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் சிபிசிஐடி விசாரணை, காலம் தாழ்ந்த விசாரணை. நீதிமன்றத்துக்கு சென்ற பின்புதான் அந்த விசாரணை நடக்கிறது.
பசியும் பட்டினியில் இருக்கிற ஏழைகள் வயிறாற மலிவு விலையில் உணவு வகைகளை உண்ணவேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம் அம்மா உணவகம். அதனை மூடியவர்களுக்கு தகுந்த பாடத்தை அடுத்து வரும் தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள் என்றார்.
ஆர்.எஸ்.பாரதி பதில்
இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது, 'எங்களிடம்கூட தான் 50 அதிமுக எம்எல்ஏக்கள் பேசி வருகின்றனர். அதிமுகவில் இருந்து எங்களிடம் (திமுகவில்) பலபேர் வந்துள்ளனர். அதை யாரும் மறுக்க முடியாது. வந்தவர்கள் பல பொறுப்புகளில் உள்ளனர். அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள்' என்றார்.