

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, பேராலய முகப்பிலிருந்து தொடங்கிய கொடி ஊர்வலம், கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத் தெரு வழியாக மீண்டும் பேராலய முகப்பை வந்தடைந்தது. பின்னர், தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் கொடியை புனிதம் செய்து வைக்க கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து, நாள்தோறும் பேராலயம், பேராலய கீழ் மற்றும் மேல் கோயில்கள், விண்மீன் ஆலயம் ஆகியவற்றில் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடைபெற்றன. மேலும், புனிதப் பாதையில் சிலுவைப் பாதையும் நடைபெற்றது. தொடர்ந்து, நாள்தோறும் இரவு 8 மணியளவில் சிறிய தேர் பவனி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி, பேராலய கலையரங்கத்தில், தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையிலும், பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் முன்னிலையிலும் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. முன்னதாக, தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடைபெற்றது. இந்நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, புனித ஆரோக்கிய மாதாவை ஜெபித்தனர்.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தொடர்ந்து, இரவு 7.30 மணியளவில் பெரிய தேர் பவனி நடைபெற்றது. இதில், பெரிய தேரில் புனித ஆரோக்கிய மாதாவும், பெரிய தேரின் முன்னால் 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகியோரும் எழுந்தருள பேராலய முகப்பில் இருந்து தேர் பவனி தொடங்கியது.
இந்தத் தேர்பவனி கடற்கரை சாலை, ஆரியநாட்டுத் தெரு வழியாகச் சென்று, மீண்டும் பேராலய முகப்பை வந்தடைந்தது. அப்போது, ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்த பக்தர்கள் ஒன்றுசேர்ந்து ‘‘மரியே வாழ்க, மாதாவே வாழ்க, பசிலிக்கா பசிலிக்கா" என முழக்கங்களை எழுப்பினர். விழாவையொட்டி, பேராலய கோபுரங்கள் மின்னொளியில் ஜொலித்தன.
இன்று (செப்.8) மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, விண்மீன் ஆலயத்தில், ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறுகிறது. பின்னர், மாலை 6 மணியளவில் கொடியிறக்கப்பட்டு, விழா நிறைவுபெறுகிறது.