Published : 08 Sep 2022 04:10 AM
Last Updated : 08 Sep 2022 04:10 AM

கோவை | முதல்வர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட அதிமுக நிர்வாகி கைது

கோவை

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட, அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாவட்ட தலைவரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஓரைக்கால் பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (45). இவர், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட தலைவராக உள்ளார். தவிர, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

சுப்பிரமணியம் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி குறித்தும் அவதூறாக கருத்துகளை பதிவிட்டுள்ளார். அவரது இந்த கருத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே, அவதூறு கருத்து பதிவிட்டது தொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் ஆய்வாளர் ஜெயதேவி தலைமையிலான காவல்துறையினர், இருகட்சியினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்தல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சுப்பிரமணியத்தின் மீது வழக்குப்பதிந்தனர்.

அவரை நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதிமுக நிர்வாகி சுப்பிரமணியம் கைதுக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அக்ரி சுப்பிரமணியம் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத திமுக அரசின் அவலங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரும், கழக பொதுச் செயலாளருமான கே.பழனிசாமியின் அறிவுரைப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்வதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x