Published : 08 Sep 2022 04:30 AM
Last Updated : 08 Sep 2022 04:30 AM
தருமபுரியில் திடீர் ஆய்வின்போது சுகாதாரமற்ற முறையில் இருந்த அரசுப் பள்ளி கழிப்பறையை தருமபுரி எம்எல்ஏ சுத்தம் செய்தார்.
தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டியில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளி வழியாக சென்ற தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் பள்ளி வளாகத்தில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
ஆய்வின்போது, பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறை சுகாதாரமற்ற முறையில் இருந்ததை கண்ட எம்எல்ஏ தாமாகவே கழிப்பறையை சுத்தம் செய்ய முன்வந்தார். இதையறிந்த பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கிருஷ்ணம்மாள் என்பவரும் பள்ளிக்கு வந்து எம்எல்ஏ-வுடன் இப்பணியில் இணைந்து கொண்டார்.
எம்எல்ஏ தன் உதவியாளர் மூலம் பிளீச்சிங் பவுடர், பினாயில் உள்ளிட்ட பொருட்களை வாங்கிவரச் செய்து, சுகாதாரமற்ற முறையில் இருந்த கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து, பள்ளி கட்டிடங்களையும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் பள்ளித் தரப்பிடம் பேசிய எம்எல்ஏ, ‘ஏழை, எளிய மாணவியர் படிக்கும் நிலையில் அவர்களின் சுகாதாரத்திலும் பள்ளி சார்பில் அக்கறை செலுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.
மேலும், பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத கழிப்பறைகள் பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாவதைக் கண்ட எம்எல்ஏ, அந்த கொசுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் போனில் அறிவுறுத்தினார்.
இதுபற்றி எம்எல்ஏ கூறும்போது, ‘சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் இப்பள்ளிக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை விரைவில் அமைத்துத் தரப்படும்.
அந்த கழிப்பறையில் சானிடரி நாப்கினை சுகாதாரமான முறையில் அழிக்கும் இயந்திரம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்படும். இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி சட்டப் பேரவையில் ஏற்கெனவே பேசியுள்ளேன்.
தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், முதல்வர் ஆகியோரிடம் இந்த கோரிக்கை குறித்து வலியுறுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT