

தருமபுரியில் நேற்று அரசுப் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பள்ளி ஆசிரியர் ஒருவரை திரைப் பாடலாசிரியர் வைரமுத்துவுடன் போனில் பேச வைத்தார்.
தருமபுரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நேற்று 4 மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர், அத்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டபோது 9-ம் வகுப்பு மாணவியருக்கு தமிழ் ஆசிரியர் தமிழ் செல்வி, கவிஞர் வைரமுத்துவின் கவிதை தொகுப்பு குறித்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பார்வை மாற்றுத் திறன் கொண்ட அந்த ஆசிரியர் பாடம் நடத்துவதை வகுப்பில் மாணவியருடன் அமர்ந்து அமைச்சரும் கவனித்தார்.
பின்னர் அமைச்சர் தனது செல்போன் மூலம் திரைப் பாடலாசிரியர் வைரமுத்துவை தொடர்பு கொண்டு, ஆசிரியர் பாடம் நடத்தும் விதம் குறித்து விவரித்ததுடன், ஆசிரியரிடம் போனில் பேசும்படி கூறிவிட்டு போனை ஆசிரியர் தமிழ்ச்செல்வியிடம் கொடுத்தார்.
போன் மூலம் தமிழாசிரியருக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார். இதைக்கேட்டு ஆசிரியர் தமிழ்ச்செல்வி மகிழ்ந்து அமைச்சருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.