Published : 08 Sep 2022 06:20 AM
Last Updated : 08 Sep 2022 06:20 AM

சொர்ணவாரி பருவத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 56 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்: அமைச்சர் சா.மு.நாசர்

திருவள்ளூர் வெள்ளியூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று திறந்து வைத்து, கொள்முதல் பணியை தொடங்கி வைத்தார். உடன் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர்.

திருவள்ளூர்: சொர்ணவாரி பருவ சாகுபடிக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 56 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவத்தில் 25,340 ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை படிப்படியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளியூர் பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை நேற்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரால், 1.52 லட்சம் மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சுமார் 40 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, சொர்ணவாரி பருவத்துக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், அரசு கிடங்குகள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 52 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் மூலம் 4 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் என 56 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

இந்த கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் சன்னரக நெல் ரூ.2,160-க்கும், பொதுரக நெல் குவிண்டால் ரூ.2,115-க்கும் கொள்முதல் செய்யப்படும். வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து நெல் எடுத்து வந்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட எல்லையில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்குப் பிறகு, எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குருவாயல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், 80 மாணவ- மாணவியர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.

இவ்விரு நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x