

சென்னை: சென்னை சைதாப்பேட்டை அப்துல் ரஷாக் காய்கறி மார்க்கெட்டை மேம்படுத்தி புனரமைப்பது தொடர்பாக நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், மண்டலக் குழுத்தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட் மிகவும் பழமையான வணிக வளாகம் ஆகும்.
இங்கே காய்கறி, பழங்கள் மற்றும் மீன் மார்க்கெட் என சிறு கடைகள் உட்பட பல நூறு கடைகள் இயங்கி வருகின்றன. காய்கறி மற்றும் பழ அங்காடி அமைந்துள்ள பகுதியானது, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது.
இந்த மார்க்கெட் நூற்றாண்டுக்கு மேலாக இயங்கி வரும் மிகவும் சிறப்பு மிக்க ஒரு மார்க்கெட் ஆகும். அதிகளவு மக்கள் பயன்படுத்தும் முக்கியமான ஒரு மார்க்கெட் பகுதியாகவும் உள்ளது. மிகவும் பழமையான இந்த மார்க்கெட் கட்டிடங்கள் சிதிலமடைந்து மழைக் காலங்களில் வியாபாரிகளுக்கும், வணிகர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அளவில் உள்ளது.
இந்த மார்க்கெட்டை புதுப்பிப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கவும், பின்னர் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விரைந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த மார்க்கெட்டை தற்காலிகமாக ஏதேனும் ஒரு மைதானத்துக்கு இடமாற்றம் செய்து பணிகளை விரைந்து முடித்துஇங்குள்ள வியாபாரிகள் அனைவருக்கும் அவரவர் வைத்துள்ள இடத்துக்கு ஏற்றார் போல், அதே அளவில் கடைகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
1996-ம் ஆண்டு சென்னை மேயராக இருந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தப் பகுதியில் நடைபாதை வியாபாரிகளுக்கு நிரந்தரமாக சிறு கடைகளை கட்டி வழங்கினார். அந்தக் கடைகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் பயன்படாமல் உள்ளன.
அந்த இடத்தை இந்த மார்க்கெட்டுக்கு பின்புறம் அமைந்துள்ள மாநகராட்சியின் மகப்பேறு மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக வழங்கி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.