Published : 24 Oct 2016 02:01 PM
Last Updated : 24 Oct 2016 02:01 PM

திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தை விமர்சிப்பதில் நியாயமில்லை: திருநாவுக்கரசர்

அனைத்து கட்சிக் கூட்டத்தை திமுக நடத்துவது ஒரு நல்ல முயற்சி. இதை விமர்சிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:

நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதிய பாக்கி

"கடந்த ஓராண்டு காலமாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. வேலை செய்த ஏழு நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது விதி. காலதாமதத்தினால் கிராமப்புற தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து ஊதிய பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும்.

காவிரி பிரச்சினையில் பாஜக துரோகம்

நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு அரசியல் ஆதாயத்தோடு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நரேந்திர மோடி அரசு மறுத்தது இன்றைக்கு வெட்டவெளிச்சமாகியுள்ளது. தமிழகத்திற்கு நரேந்திர மோடி அரசு செய்த துரோகத்தை மூடிமறைக்க பாஜகவினர் முயன்றாலும் அதை மூடிமறைக்க முடியாது. தமிழகத்திற்கு பெரும் துரோகம் இழைத்துள்ளதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.

அனைத்து கட்சிக் கூட்டதை விமர்சிக்காதீர்

காவிரி பிரச்சினை குறித்து தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நானும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, விவசாயப் பிரிவு தலைவர் எஸ். பவன்குமார் ஆகியோரும் கலந்து கொள்கிறோம்.

தமிழகம் சம்பந்தப்பட்ட பொது பிரச்சினைகளில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்துவது ஒரு நல்ல முயற்சியாகும். இதை விமர்சிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

மக்கள் நலக் கூட்டணியினர் அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக வைகோ கூறியிருக்கிறார். காவிரி போன்ற பிரச்சினைகளில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் ஒவ்வொரு கட்சியும் முடிவெடுக்க உரிமையிருக்கிறது. ஆனால் இதற்காக அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டுகிற நோக்கத்தை விமர்சிப்பதைத் தவிர்க்கலாம்.

மோடி ஜெ.வின் நலம் விசாரிக்கலாம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து நான் கூறிய சில கருத்துகள் அரசியல் ஆதாயத்தின் அடிப்படையில் கூறப்பட்டதாக பாஜகவினர் பேசி வருகின்றனர். கடந்த காலங்களில் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதே அப்போலோ மருத்துவமனையில் உடல்நலம் குன்றியிருந்த நிலையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நேரில் வந்து நலம் விசாரித்தார். அதேபோல, இன்றைய முதல்வர் ஜெயலலிதா கார் விபத்தில் காயமடைந்து சென்னை தேவகி மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது ராஜீவ்காந்தி நேரில் வருகை புரிந்து நலம் விசாரித்தார். இந்த அடிப்படையில் இன்றைய பிரதமராக இருக்கிற நரேந்திர மோடியும் முதல்வர் ஜெயலலிதாவை நலம் விசாரித்து தமிழக பாஜகவினர் கூடுதல் அரசியல் நன்மை தேடலாமே ? ஏன் செய்யவில்லை ?

அதே வேட்பாளர்களை நிறுத்தியதில் தவறில்லை

நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதே வேட்பாளர்களை திமுகவும், அதிமுகவும் நிறுத்தியிருப்பது குறித்து எந்தத் தவறும் இல்லை. ஏனெனில் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்யும் போது எவர்மீதும் குறிப்பிட்டு குற்றச்சாட்டை கூறி வேட்பாளர்களுக்கு தடை விதிக்கவில்லை. எனவே, ஏற்கெனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுவதற்கு சட்டரீதியாக எந்த தடையும் இல்லை.

தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை - வேதனை தருகிறது

இலங்கையில் தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொன்றது குறித்து வன்மையாக கண்டிக்கிறேன். வடக்கு மாகாணத்தில் வாழ்கிற தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இன்றைக்கும் நீடிப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. இலங்கை தமிழர்களுக்காக இந்திய அரசு கட்டிய வீடுகளில் இன்னும் தமிழர்கள் குடியமர்த்தாமல் இருப்பது குறித்து மத்திய பாஜக அரசு இலங்கை அரசோடு பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x