

குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிக தரைப்பாலம் வழியாக போக்குவரத்து மூடப்பட்டதால் காமராஜர் பாலத்தில் கடுமையான நெரிசலில் சிக்கிய பொதுமக்கள் திணறினர்.
நெரிசலுக்கு தீர்வு காண சமூக வலைதளங்களில் திமுக-அதிமுகவினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மோதிக்கொண்டனர். தமிழக-ஆந்திர எல்லையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பாலாறு மற்றும் கவுன்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.
இதில், ஆந்திர மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகி வேலூர் மாவட்டம் வழியாக பாலாற்றில் கலக்கும் கவுன்டன்யா ஆற்றுக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் இரவு 989 கன அடியாக அதிகரித்தது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெள்ளத்தின் அளவும் நேற்று காலை சுமார் 800 கன அடியாக இருந்ததுடன், தொடர்ந்து மழை பெய்து வருவதால் எந்த நேரமும் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
எனவே, பகல் நேரத்திலும் தற்காலிக தரைப்பாலம் வழியாக போக்குவரத்துக்கு அனுமதி அளிக் கப்படவில்லை. இதனால், குடியாத்தம் காமராஜர் பாலம் வழியாக போக்குவரத்து நெரிசல் நேற்று இருந்தது.
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், கூலி தொழி லுக்கு வந்து செல்பவர்கள், அன் றாடம் பணிகளுக்காக வந்து செல்பவர்கள், குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு, வி.கோட்டா, மேல்பட்டி, ஆம்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் நெரிசலில் சிக்கி ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியாமல் காவல் துறை யினர் திணறினர். குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து நேதாஜி சவுக் பகுதி வரை நெரிசலில் சிக்கிய பொதுமக்கள் விழிபிதுங்கினர்.
மறுபக்கம் இந்த நெரிசலுக்கு யார் காரணம் என கூறி சமூக வலைதளங்களில் திமுக-அதிமுகவினர் பரஸ்பர குற்றச்சாட்டுகளுடன் மோதிக் கொண்டனர்.
கிடப்பில் தரைப்பாலம்: குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே இருந்த பழமையான தரைப்பாலம் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அங்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என்ற அறிவிப்பு அப்படியே கிடப்பில் உள்ளது.
இதற்கான முயற்சிகள் தீவிரம் காட்டப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து, குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் அமலு விஜயனிடம் கேட்டதற்கு, ‘‘கவுன்டன்யா ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண் காணிப்பாளரும் நாளை (இன்று) குடியாத்தம் நகருக்கு வருகைதந்து ஆய்வு செய்யவுள்ளனர். ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்ட நகராட்சி கூட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி தீர்மானம் இயற்றப் பட்டுள்ளது’’ என்றார்.
குடியாத்தம் நகரில் நிலவும் போக்குவரத்து பிரச்சினை தொடர்பாக நகராட்சி மன்றத் தலைவர் செளந்தரராஜனிடம் கேட்டதற்கு, ‘‘கவுன்டன்யா ஆற்றில் ரூ.5.25 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படவுள்ளது.
பாலம் கட்டுவதற்கு நாங்கள் அனுமதி அளித்து விட்டோம். ஆனால், நெடுஞ்சாலைத் துறையினர் நிதி ஒதுக்காமல் உள்ளனர். தற்காலிகமாக போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தங்கம் நகர், காக்காதோப்பு வழியாக மேல்பட்டி, ஆம்பூர் செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டதால் நெரிசல் சற்று குறைந்துள்ளது.
அதிக காவலர்களை நியமித்து போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.