Published : 07 Sep 2022 04:52 PM
Last Updated : 07 Sep 2022 04:52 PM

யார் பிளவு சக்தி? - ராகுல் பயணத்தை விமர்சித்த அண்ணாமலைக்கு ப.சிதம்பரம் பதிலடி

திண்டுக்கல்: “அன்று வெள்ளையனே வெளியேறு என்று சொல்வதிலும் ஆர்வம் கிடையாது. இன்று இந்தியாவை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்று சொல்வதிலும் ஆர்வம் கிடையாது. யார் பிளவு சக்தி என்று இதிலிருந்து தெரிகிறது” என்று ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தை விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி தந்துள்ளார்.

திண்டுக்கல்லில் காங்கிரஸ் நிர்வாகியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியது: "இந்தியாவில் மத வேறுபாடு, சாதி வேறுபாடு, மொழி வேறுபாடு, வடநாடு தென்னாடு என்ற வேறுபாடு ஆகிய வேறுபாடுகளை தான் மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் மக்களை ஒன்றுபடுத்துவதற்காக அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் என்ற உணர்வை வளர்ப்பதற்காக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.

வெள்ளையனே வெளியேறு என்று காந்தி ஆரம்பித்த இயக்கம். இதில் காங்கிரஸ் பங்குகொண்டது. இந்தியில் பாரத் சோடோ என்று சொல்கிறோம். அதாவது பாரதத்தை விட்டு வெளியேறு என்று அர்த்தம். காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் பங்கு பெறாத இயக்கம் அன்றைய இந்து மகாசபை மற்றும் அதன் வழித் தோன்றல்கள்தான். அன்று அந்தப் போராட்டத்தில் பங்கு பெறாதவர்கள்தான் இன்று இந்தப் பயணத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு வெள்ளையனே வெளியேறு என்று சொல்வதிலும் ஆர்வம் கிடையாது. இந்தியாவை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்று சொல்வதிலும் ஆர்வம் கிடையாது. யார் பிளவு சக்தி என்று இதிலிருந்து தெரிகிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி தரும் வகையில் கூறினார். | வாசிக்க > 'பாரத் சோடோ யாத்திரை'தான் நீங்கள் நடத்த வேண்டும்: ராகுலை கிண்டல் செய்த அண்ணாமலை |

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்பது தவறு. தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் கிடையாது. குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அதிகரித்தது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் தொடர்ந்து பொருளாதாரத்தை பற்றி அறியாமல் தொடர்ந்து தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றினால் இலங்கையை போல் ஆகாது. ஆனால், ஏறத்தாழ அந்த அளவுக்கு பலவீனம் அடையலாம்.

இந்தியாவில் எந்தக் கொடி மேலே பறக்கிறதோ இல்லையோ, வேலையின்மை மற்றும் பணவீக்கம் இரண்டும் கொடிகட்டி பறக்கிறது. இந்தk கொடியை தான் பிரதமரும், நிதி அமைச்சரும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பணவீக்கத்தையும் வேலையின்மையையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறது மத்திய அரசு" என்று ப.சிதம்பரம் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x