Published : 07 Sep 2022 12:58 PM
Last Updated : 07 Sep 2022 12:58 PM

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை காலம் தாழ்ந்த நடவடிக்கை: இபிஎஸ் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

திருவள்ளூர்: "அதிமுக அலுவலக பிரச்சினைக்கு நீதிமன்றம் சென்ற பிறகுதான் இன்று சிபிசிஐடி வந்து விசாரிக்கின்றனர். பலமுறை புகார் அளித்தும், காவல்துறை மெத்தனப்போக்குடன் இருந்தது. நாங்கள் நீதிமன்றம் சென்றோம், நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் சிபிசிஐடி இன்று விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்து வருகின்றனர்" என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதலளித்த அவர் " யார் பேசிக்கொண்டுள்ளனர்? திமுகவைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் கூடத்தான் எங்களுடன் பேசி கொண்டுள்ளனர்" என்றார்.

மேலும், ராகுல் காந்தி அவருடைய கட்சியை வளர்ப்பதற்காக நடைபயணம் செல்கிறார். அதுகுறித்து நான் கருத்து சொல்ல இயலாது. திமுக ஒரு குடும்பக் கட்சி. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. உதயநிதி எந்த பதவியிலும் கிடையாது. வெறும் எம்எல்ஏ, அவர் சென்று விழாக்களில் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.மேயருக்கு உரிய மரியாதையைக்கூட திமுகவில் எதிர்பார்க்க முடியாது.

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்வது காலம் தாழ்ந்த விசாரணை. திருட்டு குறித்து புகார் அளித்தால், காவல்துறை தடயங்களை எல்லாம் சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இந்த ஆட்சியில் அது நடக்காது. நாட்டு மக்களுக்கு பாதுகாப்பும் கிடையாது. எந்தவொரு பொருள் திருட்டுப் போனாலும் அதை கண்டுபிடித்து தரக்கூடிய அளவில் தமிழகத்தில் காவல்துறையும் இல்லை. உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முதல்வரும் தமிழகத்தில் இல்லை.

அதிமுக அலுவலக பிரச்சினைக்கு நீதிமன்றம் சென்ற பிறகுதான் இன்று சிபிசிஐடி வந்து விசாரிக்கின்றனர். பலமுறை புகார் அளித்தும், காவல்துறை மெத்தனப்போக்குடன் இருந்தது. நாங்கள் நீதிமன்றம் சென்றோம், நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் சிபிசிஐடி இன்று விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்து வருகின்றனர். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இதுவே ஒரு சான்று" என்று அவர் கூறினார்.

முன்னதாக, அதிமுக அலுலவகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கு குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x