

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரி பிரதமர் அலுவலகத்தில் அதிமுக எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என கடந்த 30-ம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, வாரியத்தில் மாநில அரசுகளின் பிரதிநிதிகளை பரிந்துரைக்குமாறு தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு மத்திய நீர்வளத்துறை அறிவுறுத்தியது. தமிழகம் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதற் கிடையே, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப் பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து மனு அளிப்பதற் காக அவரது அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக எம்.பி.க்களை பாதுகாப்புப் படை யினர் தடுத்து நிறுத்தினர். இதை யடுத்து, தம்பிதுரை தலைமையில் நவநீதகிருஷ்ணன், வேணுகோபால், ஹரி, குமார், ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் மட்டும் சென்று பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக, கடந்த 2014 ஜூன் 3, 2015 ஆகஸ்ட் 7 மற்றும் 2016 ஜூன் 14 ஆகிய தேதிகளில் தங்களிடம் வழங்கிய மனுக்களிலும் முதல்வர் தெரிவித்திருந்தார். தமிழக சட்டப்பேரவையிலும் சிறப்புத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரின் பங்கு கிடைக்காததால், உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்றவில்லை. இந்த வழக்கில், காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ம் தேதிக்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசின் பிரதிநிதியாக காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் என்.சுப்பிரமணியன் பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கு மாறு உத்தரவிட உச்ச நீதிமன்றத் துக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் மனு, தமிழக அரசு மற்றும் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையாகும்.
கூட்டாட்சி அமைப்பின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என உரத்த குரலில் கூறுகின்றனர். நாட்டில் உள்ள மக்கள் எல்லாருக்கும் நடுநிலையாக இருக்க வேண்டிய மத்திய அமைச்சர்களின் அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல்பாடு, தமிழக மக்களுக்கு அநீதி இழைப்பதாக உள்ளது.
மத்திய நீர்வளத்துறையால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, பிரதமரின் கவனத்துக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை. எனவே, மத்திய அரசு சட்டத்தை வெளிப்படையாகவும், சிறந்த முறையிலும் கடைபிடிக்க பிரதமர் வழிகாட்டுவார் என நம்புகிறோம். எனவே, உச்ச நீதிமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடி யாக அமைத்து, காவிரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் தமிழக மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.