Published : 27 Oct 2016 09:29 AM
Last Updated : 27 Oct 2016 09:29 AM

வேலூர் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாளின் உறவினர் கொலை: செம்மரக் கடத்தல் விவகாரம் காரணமா?

வேலூரில் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாளின் சகோதரி மகன் சரவணன் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு, செம்மரக் கடத்தல் விவகாரம் காரணமா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

வேலூர் வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள். காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள இவரது வீட்டில், கடந்த 2014-ம் ஆண்டு 4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 500 ரூபாய், 73 பவுன் தங்க நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்களை போலீ ஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீஸாரால் தேடப் பட்ட மோகனாம்பாள், அவரது சகோதரி நிர்மலா மற்றும் நிர்மலா வின் மகன் சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

போலீஸ் காவலில் சரவணனிடம் விசாரித்தபோது, செம்மரம் வெட்டிக் கடத்தி வருவதாகவும், இதில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர், மோகனாம்பாள் உட்பட 3 பேரும் சில மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்நிலையில், வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் சரவணனின் மனைவி ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், தன் கணவர் சரவணனை கடத்திச் சென்றதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், வேலூர் ஓல்டு டவுன் மலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வேலூர் தெற்கு போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, கொலை செய்யப்பட்டு கிடந்தது கடத்தப்பட்ட சரவணன் என்பது தெரியவந்தது. சரவணன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, செம்மரக் கடத்தல், செம்மரம் வெட்ட கூலியாட்களை அனுப்புவது ஆகியவற்றை தொடர்ந்து செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், முன்விரோதம் காரணமாக சரவணன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காட்பாடியைச் சேர்ந்த 2 பேரைப் பிடித்த போலீஸார், சரவணன் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சரவணன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x