

கொடைக்கானல் அருகே பேத்துப் பாறையில் கன மழையால் வீடு இடிந்து விழுந்தது. தாண்டிக்குடியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதிகளில் கன மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொடைக்கானலில் 49 மி.மீ., படகு குழாம் பகுதியில் 43.6 மி.மீ., மழை பதிவானது.
கனமழையால் பல இடங்களில் மரங்கள்முறிந்து விழுந்தன. சிற்றோடைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோழா உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் பேத்துப்பாறை அருகே வயல் பகுதியில் ஒரு வீடு இடிந்து விழுந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
தாண்டிக்குடி, மஞ்சள் பரப்பு, மங்களம்கொம்பு உள்ளிட்ட கீழ் மலைப்பகுதியிலும் பலத்த மழைபெய்தது. இதன் காரணமாக இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கின.
சில நாட்களுக்கு முன்பு தாண்டிக்குடி - வத்தலகுண்டு சாலையில் பட்டலங்காடு அருகே மண் சரிவு ஏற்பட்டது. அந்த இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தற்காலிகமாக நெடுஞ் சாலைத்துறையினர் சாலையை சீரமைத்தனர்.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் மண் சரிவு ஏற் பட்டு மணல் மூட்டைகள் சரிந்து விழுந்தன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச் சத்துடன் பயணிக்கின்றனர்.