

மேல்மணம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே வெள்ளவேடு அடுத்துள்ள மேல்மணம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். கடந்த 10 ஆண்டுகளாக மேல்மணம்பேடு ஊராட்சிமன்றத் தலைவராக பதவி வகித்தார். இவர் செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை நடைபயிற்சிக்காக சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தங்கராஜை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இக்கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ராஜேஷ், சரவணன், தினேஷ் உள்ளிட்ட 8 பேர் சென்னையில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 8 பேரையும் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை கடம்பத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
மேல்மணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்கராஜூக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மனோகரன் மகன் ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் தங்கராஜை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
2006 மற்றும் 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்களில் தங்கராஜை எதிர்த்து தேவராஜ் என்பவர் போட்டியிட்டார். அவருக்கும் இக் கொலையில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக் கப்படுகிறது. பிடிபட்ட 8 பேரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.