

ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு ராகுல்காந்தி இன்று நடைபயணம் தொடங்குவதை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உளவுப் பிரிவினர், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், கியூ பிராஞ்ச் போலீஸார் உட்பட சிறப்பு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன் மேற்பார்வையில், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் போலீஸ்அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்படுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலினும் இன்று வர இருப்பதால் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையும், காவல்கிணறு முதல் கன்னியாகுமரி வரையும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம்,பொது இடங்களில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வந்தவாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. ராகுல்காந்தி பேசும் பொதுக்கூட்ட மேடையில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான கடற்கரை பகுதிகளில் மெரைன் போலீஸார் சோதனை நடத்தினர்.