

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் பழுதடைந்த 3,500 அடுக்குமாடி குடியிருப்புகள் இடித்து கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி கோட்டம் 123-ல் மைலாப்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள பல்லாக்கு மான்யம் திட்டப்பகுதியில் பழுதடைந்த குடியிருப்புகள் இடித்து கட்டப்பட்டன. அங்கு வசித்து வந்த 48 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை குடிசை மாற்று வாரிய தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
மேலும் கோட்டம் 161 மண்டலம் 12-ல் பரங்கிமலை ரயில் நிலையம் அருகிலுள்ள பாலத்தின் கீழ் 35-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தற்காலிக கூரை அமைத்து குடியிருந்து வந்தனர். தங்களுக்கு நிரந்தர குடியிருப்பு ஒதுக்கீடு செய்து தரவேண்டி முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்தனர். தமிழக முதல்வரின் உத்தரவின்படி, குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் நாவலூர் திட்டப்பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் 35 குடும்பங்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதற்கான ஆணைகளையும் பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.