காரைக்கால் மாணவர் விஷம் கொடுத்து கொலை: மருத்துவர்கள், காவல் துறை செயல்பாடுகள் மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

நாராயணசாமி | கோப்புப் படம்
நாராயணசாமி | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: “காரைக்காலில் மாணவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதிபதி விசாரணை தேவை” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியது: "காரைக்காலில் மாணவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவருக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் இறந்ததாக கூறப்படுகிறது. முதல்நாள் மாணவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது டாக்டர்கள் மாத்திரையை மட்டும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். காவல் துறையும் மிகவும் மெத்தனப்போக்குடன் நடந்துள்ளது.

மாணவர் இறப்புக்கு டாக்டர்களின் மெத்தனமும், காவல் துறையின் செயலற்றதன்மையும் காரணம். இதுகுறித்து நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும். காரைக்கால் மருத்துவமனையில் அவல நிலை தொடர்கிறது.

மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க ரூ.15 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக தெரிவித்தேன். இதில் ரூ.90 கோடி கைமாறியுள்ளது எனவும் கூறியிருந்தேன். இதுதொடர்பாக ஆட்சியாளர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. ஊழல் நடந்திருப்பது உறுதியாக தெரிகிறது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே புகாரும் செய்துள்ளனர். இது மட்டுமின்றி கலால் துறை மூலம் சுற்றுலா என்ற பெயரில் மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்குவதிலும் பல்வேறு ஊழல், முறைகேடுகள் நடக்கிறது. ரூ.10 லட்சம் வரை பேரம் பேசி வாங்குகின்றனர். மதுக்கடைகளை இடமாற்றம் செய்வதிலும் விதிமுறைகள் மீறப்பட்டு, கையூட்டு பெறப்பட்டுள்ளது. கோயில், பள்ளி, விளையாட்டரங்கம் உள்ள பகுதிகளில் மதுபானக் கடைகள் அமைக்க அனுமதி வழங்கியுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் நடந்த தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில் தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி சார்பில் துணைநிலை ஆளுநர் பங்கேற்றார், முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் மத்திய அரசின் பல துறை அதிகாரிகள் பங்கேற்பதால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏதுவாக இருக்கும். அண்டைமாநில முதல்வர்கள் பங்கேற்பதால் மாநில பிரச்சினைகள் குறித்தும் பேசி முடிவெடுக்கலாம். இந்த மாநாட்டில் பேசப்படும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு அதன் மீது முடிவு எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். மாநாட்டில் பங்கேற்க வரும்படி புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு ஒரு மாதம் முன்பே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் மாநாட்டை ரங்கசாமி புறக்கணித்த பின்னணி என்ன? துணைநிலை ஆளுநர் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டு நியமிக்கப்படுபவர். அவர் மத்திய அரசுக்கு சாதகமாகத்தான் செயல்படுவார். இதனால் மாநில பிரச்சினைகள் குறித்து முதல்வரால் மட்டுமே பேச முடியும். இதில் ரங்கசாமி பங்கேற்காதது துரதிர்ஷ்டவசமானது. அவர் பங்கேற்காதது குறித்து மக்களிடம் விளக்க வேண்டும்" என்று நாராயணசாமி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in