

தமிழகத்தில் உள்ள அரசு பொறி யியல் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளில் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்) காலியாகவுள்ள 192 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வு அக் டோபர் 22-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 11 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு தேர்வுக்கூட அனு மதிச்சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர் அல்லது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு ஆன்லைனில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் உமா அறிவித்துள்ளார்.