Published : 06 Sep 2022 05:06 AM
Last Updated : 06 Sep 2022 05:06 AM

புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கினார் முதல்வர்: உதவி தொகையை கல்விக்காக மட்டுமே செலவிட வேண்டும் என அறிவுறுத்தல்

சென்னை: அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த தொகையை மாணவிகள் கல்விக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

தமிழக அரசின் சமூக நலத்துறைசார்பில், ‘புதுமைப்பெண்’ என்றபெயரில் மூவலூர் ராமாமிர்தம்அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.

சென்னை பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், தமிழகம் முழுவதும் 26 தகைசால் பள்ளிகளையும், 15 மாதிரிப் பள்ளிகளையும் தொடங்கிவைத்தார். இரு முதல்வர்களும் சேர்ந்து, சென்னையில் 2,500 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய புதுமைப்பெண் பெட்டகப்பை, வங்கி டெபிட்கார்டு ஆகியவற்றை வழங்கினர்.மாதந்தோறும் 7-ம் தேதி மாணவிகளின் வங்கிக்கணக்கில் இந்த உதவித் தொகை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாதம் மட்டும், திட்ட தொடக்க விழாவையொட்டி நேற்றே மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டது.

திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வர் மட்டுமல்ல. அவர் ஒரு போராளி. தனது ஐஆர்எஸ் பணியை துறந்துவிட்டு, மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார். அவரை நாடே உற்று நோக்கி வருகிறது.

‘புதுமைப்பெண்’ திட்டத்தில் இப்போதே, உங்கள் வங்கிக் கணக்கில் உங்களுக்கான கல்வி உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. 76 ஆண்டுகளை கடந்து கல்வித் தொண்டாற்றி வரும் பாரதி மகளிர் கல்லூரியில் ஒரு சில கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது என் கவனத்துக்கு வந்தது. உடனடியாக, ரூ.25 கோடியில்33 வகுப்பறைகள், 7 ஆய்வகங்கள், 2 நூலகங்கள் மற்றும் 3 ஆசிரியர்அறைகள் கொண்ட, தரைதளத்துடன் கூடிய 3 அடுக்கு கட்டிடம் கட்ட உத்தரவிட்டுள்ளேன். விரைவில்பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சமூக நலத்துறை சார்பில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 15 மாதிரிப் பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகளும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

வேறுபாடும், மாறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்ற நோக்கில்தான் 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சிஉருவானது. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையேஇதுதான். இன்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் கல்லூரியில் படிக்கிறார்கள் என்றால், அது திராவிடஇயக்க பெண்ணுரிமை போராட்டங்களால் விளைந்த பயன்.

மாணவிகளுக்கு ரூ.1,000 இலவசமாக வழங்குவதாக அரசு கருதவில்லை. அதை கடமையாக நினைக்கிறது. பள்ளியுடன் படிப்பைநிறுத்தும் பெண்ணுக்கு மாதம்ரூ.1,000 கிடைப்பதால் கல்லூரிக்குள் நுழைவர். இதன்மூலம் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, படித்தவர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கடந்த ஓராண்டில் பள்ளிக்கல்வித் துறை மகத்தான சாதனைகளை புரிந்துள்ளது. தற்போது, முதல்கட்டமாக ரூ.171 கோடியில் 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். பள்ளியின் கட்டிடங்கள் நவீனமயமாக்கப்படும். கற்றல் செயல்பாடுகளுடன் சேர்த்து கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறைஅறிவியல், விளையாட்டு ஆகியஅனைத்து திறமைகளும் மாணவர்களுக்கு உருவாக்கப்படும். இவை அனைத்து மாவட்டங்களுக்கும் அடுத்தடுத்து விரிவுபடுத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் அடுத்து வரும் 4 ஆண்டுகளில் ரூ.150 கோடியில் ஒரு ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும். பேராசிரியர் அன்பழகனார் பெயரிலான பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.7,500 கோடியில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட இருக்கின்றன. தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் தொலைநோக்கு பார்வையுடன் தீட்டப்படுகின்றன. சிற்பி கவனமாக சிலையை செதுக்குவதைப்போல் தமிழக திராவிட மாடல் ஆட்சி கவனத்துடன் செயல்படுகிறது.

நீங்கள் அனைவரும் ஒரு பட்டத்தோடு நிறுத்திவிடாமல் உயர்கல்வி படியுங்கள். ஏதாவது ஒரு பாடத்தில் ஆராய்ச்சி செய்யுங்கள். பெண்களுக்கு பொருளாதார விடுதலை மிக முக்கியம். படிக்கும் காலத்தில் திறமையாகச் செயல்படக்கூடிய பல பெண்கள், திருமணத்துக்குப் பிறகு வீட்டுக்குள் முடங்கிவிடுகின்றனர். கல்வி அறிவு, கலைத்திறன், தனித்திறமைகள்தான் யாராலும் அழிக்க முடியாத சொத்துகள்.

புதுமைப்பெண் திட்டத்தை தந்தைக்குரிய கடமையுணர்வுடன் தொடங்கி வைத்துள்ளேன். இந்த உதவித் தொகையை நீங்கள் முறையாக பயன்படுத்த வேண்டும். உங்களுடைய தாய், தந்தையரின் ஆலோசனையை பெற்று, கல்வி வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்துங்கள். உங்களை வளர்த்தெடுக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். இந்த அரசும் இருக்கிறது. புதுமைப்பெண் போன்ற ஏராளமான திட்டங்களை கொண்டு வருவோம்.

இவ்வாறு முதல்வர் பேசினார். விழாவில் தமிழக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x