

ராயபுரம் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தையை திருட முயன்ற 2 பெண்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டு பிடித்து காவல் துறையினர் தேடி வருகின்ற னர்.
சென்னை வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்தவர் குணசேகரன்(38). இவரது மனைவி வைத்தீஸ்வரி(26). நிறைமாத கர்ப்பிணி யான வைத்தீஸ்வரி, பிரசவத்திற்காக ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. மருத்துவ மனையின் 12-வது வார்டில் வைத்தீஸ்வரியும், குழந்தையும் இருந்தனர். வெள்ளிக் கிழமை காலையில் வைத்தீஸ்வரிக்கு துணையாக இருந்த அவரது உறவினர் வெளியே சென்றார்.
அப்போது வைத்தீஸ்வரியின் அருகே வந்த 2 பெண்கள், ‘இங்கே ரேகா என்று யாராவது இருக்கிறார்களா?’என்று கேட்டுள்ளனர். அதற்கு வைத்தீஸ்வரி தெரியாது என்று கூறியுள்ளார்.பிறகு வைத்தீஸ்வரியிடம் அவர்கள் பேச்சு கொடுத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து அவர்களில் ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். வைத்தீஸ்வரி கீழே குனிந்து தண்ணீரை எடுத்து நிமிர்வதற் குள் 2 பெண்களும் சேர்ந்து குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளனர்.
குழந்தையை அவர்கள் கடத்தி சென்றுவிட்டதாக வைத்தீஸ்வரி கதறி அழ, உஷாரான மருத்துவமனை ஊழியர் கள் உடனே மருத்துவமனை கட்டிடத்தின் நுழைவு வாயிலைப் பூட்டி சோதனை நடத்தினர். இது நடந்த சிறிது நேரத்தில் 12-வது வார்டு அருகே உள்ள ஒரு அறையில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள் ளது. அங்கு சென்று பார்த்த போது ஒரு கட்டிலின் அடியில் குழந்தை இருந்தது. குழந்தையை மீட்ட ஊழியர் கள் அதை வைத்தீஸ்வரியிடம் ஒப்படைத் தனர். கேட்டை பூட்டி சோதனை நடத்தப் பட்டதால் குழந் தையை திருடிய பெண்களே வேறு வழியில்லாமல் கட்டிலின் அடியில் குழந்தையை போட்டு விட்டு தப்பியதாக கருதப்படுகிறது.
அதை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் குழந்தையை கடத்திய பெண்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருப்ப தால், அதில் பதிவாகியிருக்கும் காட்சி களை காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். குழந்தையை திருட வந்த பெண்களை வைத்தீஸ்வரி பார்த் திருப்பதால், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளை அவரிடம் காட்டி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையில் ரவி, கலையரசி தம்பதியின் குழந்தை கடத்தப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குழந்தையை கடத்திய பெண்ணை காவல் துறையினர் கைது செய்து குழந்தையையும் மீட்டனர்.