

சென்னை: தமிழகத்தில் சத்துணவு, அங்கன்வாடி மையங்களுக்கு வழங்குவதற்காக ரூ.640 கோடி மதிப்பிலான முட்டைகளை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 190 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு மையங்கள் மூலம் மதிய நேரத்தில் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்டவற்றுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல, அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் தக்காளி சாதம், பருப்பு சாதம் உள்ளிட்டவற்றுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளுக்கு விநியோகம் செய்வதற்காக, முட்டைகளை கொள்முதல் செய்ய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, ஓராண்டுக்கு விநியோகம் செய்வதற்காக, ரூ.640 கோடி மதிப்பிலான முட்டைகளை கொள்முதல் செய்ய, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட துறை அதிகாரி கூறும்போது, “முட்டைகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்ய செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலைக்குள் டெண்டர் புள்ளிகள் இறுதி செய்யப்படும்” என்றார்.