கள்ளக்குறிச்சி மாணவி குறித்து அவதூறு: யூடியூப் சேனல் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் தாய் புகார்

கள்ளக்குறிச்சி மாணவி குறித்து அவதூறு: யூடியூப் சேனல் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் தாய் புகார்
Updated on
1 min read

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் உயிரிழந்தார்.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மாணவியின் உடலை வாங்க மறுத்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது வன்முறை வெடித்து பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கலவரம் மற்றும் மாணவியின் இறப்பு குறித்து போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவியின் தாய் நேற்று தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில், ‘எனது மகள் மர்ம மரணம் குறித்தும், எங்கள் குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் தவறான வகையில் யூடியூப் சேனல் ஒன்று தொடர்ந்து அவதூறாக பதிவு செய்து வருகிறது.

இது எங்களுக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. பல முறை இதுகுறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் நிர்வாகியிடம் பேசியபோதும், அவர்கள் திட்டமிட்டே அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

எனவே எனது மகள் இறப்பு குறித்தும், எங்கள் குடும்பம் குறித்தும் தவறான உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டு வரும் யூடியூப் சேனலை தடை செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in