

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை கனமழை பெய்தது. இதில், போச்சம்பள்ளியில் 2 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.
கிருஷ்ணகிரி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை 1.15 மணி அளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. போச்சம்பள்ளி பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான குடியிருப்புகள் மழை நீர் சூழ்ந்தது. மயிலம்பட்டி கிராமத்தில் 2 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழந்ததால் மக்கள் சிரமம் அடைந்தனர். மேலும், அங்குள்ள மஞ்சள் தோட்டத்தில் மழைநீர் புகுந்ததால், செடிகள் நீரில் மூழ்கின.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம்: ஓசூர் 57, தளி 50, கிருஷ்ணகிரி 49.6, தேன்கனிக்கோட்டை 42, நெடுங்கல் 40.2, ராயக்கோட்டை 10, போச்சம்பள்ளி, சூளகிரி தலா 7, அஞ்செட்டியில் 5 மிமீ மழை பதிவானது.
அணைகளில் நீர் நிலவரம்: கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 3,751 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3,539 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 3,039 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 49.95 அடியாக உள்ளது.
சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணைக்கு நேற்று நீர்வரத்து விநாடிக்கு 610 கனஅடியாக இருந்தது. அணை நிரம்பியுள்ள நிலையில் நீர்வரத்து முழுவதும் உபரியாக வெளியேற்றப்படுகிறது.
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 3-வது நாளாக நேற்றும் நீர்வரத்து விநாடிக்கு 2,020 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 40.02 அடியாக உள்ளது. கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது.