

கிருஷ்ணகிரி அருகே உள்ள கம்மம்பள்ளி கெட்டூர் ஏரி 22 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பியது. ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் புகுந்ததால், பள்ளி மாணவர்களுக்கு நேற்று (5-ம் தேதி) விடுமுறை விடப்பட்டது.
கிருஷ்ணகிரியை அடுத்த கம்மம்பள்ளி ஊராட்சியில் கொல்லப்பட்டி, கெட்டூர், எலுமிச்சங்கிரி, மல்லிநாயனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கெட்டூர் ஏரி உள்ளது. கடந்த 22 ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழையின்றி ஏரி வறண்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது தொடர்ந்து பெய்த மழையால், கெட்டூர் ஏரிக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீர் அப்பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் மற்றும் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்புகுந்தது.
இதனால், வழக்கம்போல பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் பள்ளியின் உள்ளே செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, நேற்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்று ஆசிரியர் தினம் என்பதால், பள்ளிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகள் தங்கள் ஆசிரியர்களுக்கு மலர்களை வழங்கி வாழ்த்து பெற்றனர்.
இதனிடையே, ஊராட்சித் தலைவர் சென்றாயன் மற்றும் ஆசிரியர்கள், கிராம மக்கள் ஆகியோர் இணைந்து பள்ளி வளாகத்தில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் கோரிக்கை இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:
கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 430 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக்கு போதிய இடவசதி இல்லை. இதுதொடர்பாக கல்வித்துறை அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. ஊராட்சியில் 9 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டிடங்களை கட்டி அங்கு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கெட்டூர் ஏரியில் நீர் வெளியேறும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக நீர் வெளியேற வழியில்லாமல் விளைநிலங்களுக்கு நீர் சென்றதால், நிலக்கடலை, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.
எனவே, நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.