தமிழ், அரபு, ஆங்கில சப்-டைட்டிலுடன் தமிழ்த்தாய் வாழ்த்து இசை காணொலி வெளியீடு

தமிழ், அரபு, ஆங்கில சப்-டைட்டிலுடன் தமிழ்த்தாய் வாழ்த்து இசை காணொலி வெளியீடு
Updated on
1 min read

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் அரபு மொழித் துறை பேராசிரியர் அ.ஜாகிர் ஹுசைன் இயக்கிய ‘தமிழ்த்தாய் வாழ்த்து இசைக் காணொலி’ வெளியீட்டு நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் உள்ள பவளவிழா அரங்கில் நேற்று நடைபெற்றது. காணொலியை பல்கலைக்கழக துணைவேந்தர் ச.கவுரி வெளியிட, இசையமைப்பாளர் தாஜ்நூர் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேராசிரியர் அ.ஜாகிர் ஹுசைன் பேசியதாவது: தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருளை உலகம் முழுவதும் உள்ளவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த காணொலியில் சப்-டைட்டிலில் தமிழ், அரபு, ஆங்கிலம் கொடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் அரபு, தமிழ், ஆங்கிலத் துறை பேராசிரியர்களுடன் இணைந்து இந்த காணொலி தயாரிக்கப்பட்டுள்ளது. உலகில் தமிழர்கள் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. ஆனால், அதன் பொருள் பலருக்கு தெரிவதில்லை. அதனால்தான் சுமார் 7 மாதங்கள் உழைத்து காணொலியை உருவாக்கியுள்ளோம்.

இந்த காணொலிக்கு இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைத்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் நிறுவன தினமான இன்று (செப்.5) காணொலி வெளியிடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் மொழித்துறை தலைவர் ய.மணிகண்டன், தமிழ் இலக்கியத் துறை தலைவர் கோ.பழனி மற்றும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in