

செங்கை/காஞ்சி/திருவள்ளூர்: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சா.மு.நாசர் ஆகியோர் முதல்கட்டமாக 2,095 மாணவிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை வழங்கினர்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் உதவித்தொகைகள் வழங்கி அரசு பள்ளி மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் நோக்குடன் புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதன்படி, தமிழகம் முழுவதும் உயர்கல்வி பயில்வதற்காக சேர்ந்துள்ள மாணவிகளில் முதற்கட்டமாக 25 சதவீதம் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக 694 மாணவிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை வழங்கப்பட்டன. இவ்வாறு மாவட்டத்தில் முதற்கட்டமாக 12 கல்லூரியைச் சேர்ந்த 2,381 மாணவிகளுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்சியை தொடந்து அவசர சிகிச்சை முன்னுரிமை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பேட்டரி ஸ்டெரச்சர் வாகனத்தையும், தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு வழங்கப்பட்ட நவீன அவசர ஊர்தியையும் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத் துறை ஆணையர் சங்கீதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ். செல்வகுமார், சார் ஆட்சியர் சஞ்சீவனா, எம்எல்ஏக்கள், மேயர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, “காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 10 கல்லூரிகளைச் சேர்ந்த 647 மாணவிகளுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சுமார் 1,795 மாணவிகளுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளது.
மேலும் இது தொடர்ச்சியாக நடைபெறும் திட்டம் என்பதால் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் சென்றடையும். இந்தத் திட்டத்தை மாணவிகள் முறையாக பயன்படுத்தி தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்றிக் கொள்ள வேண்டும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, எம்.பி. க.செல்வம், எம்எல்ஏக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவள்ளூர்
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 18 கல்லூரிகளைச் சேர்ந்த 754 மாணவியர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000-ம் வழங்குவதற்கான ஏடிஎம் கார்டுகள் வழங்கும் விழா ஆவடி பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் நடந்தது. இதில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று ஏடிஎம் அட்டைகளை வழங்கினார்.
தொடர்ந்து, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட வசந்தம் நகர் பகுதியில் நீர்வளத்துறை சார்பில் வெள்ளத் தடுப்பு பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.21.90 கோடி மதிப்பில் பருத்திப்பட்டு ஏரி உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் கால்வாய்கள் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமன் எம்எல்ஏக்கள் ஆவடி மேயர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.