

சென்னை: ரயில் பயணிகளின் டிக்கெட்களை பரிசோதிப்பதற்காக, கையடக்க கணினி (டேப்லெட்ஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயணிகள் ஏற வேண்டிய நிலையத்தில் (போர்டிங் பாயின்ட்டில்) கட்டாயம் ஏறிவிட வேண்டும். தவறவிட்டால், டிக்கெட் ரத்தாக வாய்ப்பு உள்ளது.
பயணிகளின் டிக்கெட்களை எளிதாக பரிசோதிக்கும் விதமாக,தெற்கு ரயில்வேயில் 185 ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு 800 கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில், சென்னை எழும்பூர்-திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் மலைகோட்டை ரயில், சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் சேரன் விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இந்த கையடக்க கணினி மூலமாக, பயணச் சீட்டுகளை எளிதாக சரிபார்க்க முடியும். காலியாக உள்ள இருக்கைகள், படுக்கைகள் விவரத்தை உடனடியாக பயணிகள் முன்பதிவு தரவு நிலையத்துக்கு அனுப்ப முடியும். இதன்மூலம், வழியில் உள்ள ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் இந்த காலியிடங்களை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதேநேரத்தில், பயணிகள் தங்கள் டிக்கெட்டில் குறிப்பிட்டபடி, ஏற வேண்டிய நிலையத்தில் (போர்ட்டிங் பாயின்ட்டில்) கட்டாயம் ஏறிவிட வேண்டும்; இல்லாவிட்டால், சிக்கல் ஏற்படும்.
ரயில் புறப்பட்டு அடுத்த 15 முதல் 20 நிமிடங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் பரிசோதனையை தொடங்கி, பயணியர் பட்டியலை கையடக்க கணினி மூலமாக, உடனுக்குடன் தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, பயணிகள் முன்பதிவு செய்தபோது, விண்ணப்பத்தில் குறிப்பிட்ட நிலையத்தில் ரயிலில்ஏறிவிட வேண்டும். இல்லாவிட்டால், முறைப்படி போர்டிங் பாயின்ட் நிலையத்தை மாற்றம் செய்தாக வேண்டும். மாற்றாமல் இருந்தால், டிக்கெட் ரத்தாகும் என்றனர்.