

ஒரே நாளில், அதிகபட்சமாக 293.97 மில்லியன் மின்சார விநியோகம் செய்து தமிழக மின் வாரியம் சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மின் நிலையங்களில் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வல்லூர், வடசென்னை, மேட்டூர் உள்ளிட்ட புதிய மின் திட்டங்களின் மூலம் தமிழகத்தில் மின்சார உற்பத்தி அளவு அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் கோடை வெப்பம் காரணமாக மின்சாரத் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், தொடர்ந்து அவ்வப்போது மின் வெட்டு அமலாகும் நிலையும் ஏற்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்புவரை, தமிழக மின் வாரியம் மூலம் தினமும் சராசரியாக 272 மில்லியன் யூனிட் மின்சாரம் மட்டுமே 24 மணி நேரத்தில் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது படிப்படியாக வினியோக நிலை உயர்ந்து, கடந்த 20-ம் தேதி 293.97 மில்லியன் யூனிட்களாக மாறியது.
கடும் வெயிலால் கடந்த 17, 18 தேதிகளில் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரத் தேவை கடுமையாக உயர்ந்தது. மின் விசிறி, வாட்டர் கூலர், ஏர் கூலர், குளிர்சாதனப் பெட்டி, குளிர்பதனப் பெட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால், மின்சாரத் தேவை உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மே 16-ல் மின் தேவை அதிகபட்சமாக 12,995 மெகாவாட்டாக இருந்த நிலையில், ஜூன் 17-ம் தேதி 13,465 மெகாவாட்டாகவும் 18-ம் தேதி 13,665 மெகாவாட்டாகவும் அதிகரித்தது. ஜூன் 18 நிலவரப்படி 24 மணி நேரத்தில், தமிழக மின் வாரியம் அதிகபட்சமாக 292.23 மில்லியன் யூனிட் மின்சாரம் விநியோகித்தது.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி மீண்டும் மின்சாரத் தேவை அதிகரித்ததால் மின் விநியோகம் 293.97 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 24 மணி நேரத்தில் விநியோகித்த அதிகபட்ச மின்சாரம் இதுதான் என்று மின் துறையினர் தெரிவித்தனர்.