

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் டெங்குகாய்ச்சலால் 3,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்என்று தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. இதனால், கடந்த 2020-ல் தமிழகத்தில் மொத்தம் 2,410 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் 6,039 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் இதுவரை 3,396 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 100-க்கும் மேற்பட்டோர் சிக்குன்குனியாவாலும், 150-க்கும் அதிகமானோர் மலேரியாவாலும், 700-க்கும் மேற்பட்டோர் (லெப்டோஸ்பிரோசிஸ்) எலிக் காய்ச்சலாலும், 1,120 பேர் ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டதாக பொதுசுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கரோனாவுடன், டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாகதெரிவிக்கவும், மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை, டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும் உள்ளன. பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதால், அந்த பொருட்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.